பெங்களூரு: கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது சுசித்ராவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார் புஷ்பாவதி செய்த பில்லி சூனியம் தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது 55 வயது தாயின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். பில்லி சூனியம் காரணமாகவே தனது தந்தை இறந்ததாக கருதிய அவர், தாய் மீது தீராத வன்மம் கொண்டு பழிவாங்க காத்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புஷ்பாவதியை, மகள் சுசித்ரா தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் இது இயற்கையான மரணம் என நாடகமாடிய அவர், உண்மையை மறைக்க உடலை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார்.
புஷ்பாவதியின் உடலில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள் இது குறித்து கியாட்சந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுசித்ராவை பிடித்து விசாரித்த போது, ‘தந்தையின் மரணத்திற்கு பில்லி சூனியம் வைத்ததால் தாயை கொன்றேன்’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சுசித்ராவை கைது செய்துள்ள போலீசார், இந்த கொலையில் அவரது கணவருக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிடர் கூறியதை கேட்டு, தனது தாயையே மகள் தலையணையால் அமுக்கி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
