திருவனந்தபுரம்: கேரளாவில் கோடை வெயில் இப்போதே வாட்டத் தொடங்கிவிட்டது. கடந்த சில தினங்களாக பகலில் வெப்பநிலை சராசரியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கண்ணூர், பாலக்காடு, புனலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை 10 மணிக்கே வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணூர் விமான நிலையத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால் கேரளாவில் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான பணிநேரத்தை மாற்றியமைக்க தொழிலாளர் நலத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி காலை 7 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையே 8 மணிநேர பணிநேரத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஷிப்ட் வேலையாக இருந்தால் முதல் ஷிப்டுக்கான பணிநேரத்தை நண்பகல் 12 மணிக்குள் முடிக்க வேண்டும். அடுத்த ஷிப்டுக்கான வேலைநேரத்தை பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டும். இந்த நேரக் கட்டுப்பாடு மே 20ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
