அய்சால்: மிசோரத்தில் அரசு பள்ளிகளில் அனுபவ அடிப்படையிலான பாடத்திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். மிசோரம் மாநில அரசானது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகியவற்றின்படி மாநிலத்தின் கல்வி முறையை சீர்திருத்தம் செய்து நவீனமயமாக்கும் வகையில் பள்ளிகளில் நேரடி அனுபவ அடிப்படையிலான கற்றல் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நடவடிக்கையானது பாரம்பரிய மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து விலகுவதாகும்.
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் கரோலின் சோரம்தாங்கி கூறுகையில்,‘‘1,2,3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் 2026-2027ம் கல்வியாண்டில் இருந்து வெளியிடப்படும். 4,5,7, மற்றும் 8ம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் 2027-2028ம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டமானது விமர்சன சிந்தனை மற்றும் நேரடி அனுபவ கற்றல் குறித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக விளக்கப்படம், நாடகம் மற்றும் களப்பயணங்களக்கு முன்னுரிமை அளிக்கும்” என்றார்.
