கேரளாவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

திருவனந்தபுரம்: கொச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின். இவர்களுக்கு 10 மாதத்தில் ஆலின் என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள் 3 பேரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினர்.

இதில் படுகாயமடைந்த 3 பேரும் கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ஆலின் மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில் தங்களது மகளின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவற்றை தானமாக கொடுக்க அருண் ஆபிரகாமும், ஷெரினும் தீர்மானித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்தக் குழந்தையின் 3 உடல் உறுப்புகளும் திருவனந்தபுரத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள 3 குழந்தைகளுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்றிரவு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஆலின் என்ற இந்த 10 மாத குழந்தைதான் கேரளாவில் உடல் உறுப்புகளை தானம் செய்த மிகவும் வயது குறைந்த நன்கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: