- TTV
- மதுரை
- மதுரை மாவட்டம்
- திமுக
- அஇஅதிமுக
- திருப்பரங்குன்றம்
- மதுரை மேற்கு
- திருமங்கலம்
- உசிலம்பட்டி
- மேலூர்
- எம்எல்ஏ...
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 5 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்களும் எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்களில் உசிலம்பட்டி எம்எல்ஏவாக உள்ள ஐயப்பன் அதிமுக சார்பில் 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராக உள்ளதால், தொகுதியில் தனித்து செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், அதிமுகவும் – அமமுகவும் இணைந்தபின் சமீபத்தில் மதுரைக்கு டிடிவி.தினகரன் வந்தபோது, அவரை நேரில் சந்தித்து பேசி சென்றுள்ளார். சுமார், அரை மணிநேரத்திற்கும் மேல் நடந்த இச்சந்திப்பில் அமமுகவில் இணையுமாறு டிடிவி.தினகரன் தரப்பிலிருந்து ஐயப்பனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையை பொறுத்தவரை உசிலம்பட்டி மற்றும் மேலூர் ஆகிய இரு தொகுதிகளே அதிக பலம் வாய்ந்த தொகுதிகளாக இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதில், மேலூர் தொகுதியில் 2001 முதல் கால் நூற்றாண்டாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கு பெரிய பங்கு உண்டு. 2001, 2006, 2011 என மூன்று சட்டசபை தேர்தல்களில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ சாமி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளார். இவர் டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். தற்போது உயிருடன் இல்லை.
அவரை தொடர்ந்து, தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள பெரியபுள்ளான் (எ) செல்வம் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார். தொகுதியை பொறுத்தவரை பெரியபுள்ளானை விட, சாமிக்கு தான் ஆதரவாளர்கள் அதிகம். அவரது, சமுதாயம் சார்ந்து மட்டுமின்றி பரவலாகவே தொகுதியில் சாமிக்கு என, தனி செல்வாக்கு உள்ளது. அவரின் மறைவுக்கு பின் அவரது மகன் ஆசைக்கும் உள்ளது. அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு முன்பு வரை ஆசையை, அதிமுகவிற்கு எதிராக வாக்குகளை பிரிக்க வரும் சட்டசபை தேர்தலில் நிறுத்தலாம் என, கட்சி தலைமை முடிவு செய்திருந்தது.
அதிமுகவும்- அமமுகவும் இணைந்த நிலையில், தொகுதியை விட்டுக் கொடுக்க தாங்கள் தயாராக இல்லை என, சமீபத்தில் மதுரை வந்த டிடிவி.தினகரனிடம் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். எனினும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, சாமியின் மகன் ஆசை, பெரியபுள்ளான் என மூவர் தரப்பிலிருந்தும் தொகுதியை கைப்பற்ற இரண்டு கட்சியின் தலைமையிடமும், கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதே நிலை தான் உசிலம்பட்டி தொகுதியிலும் நீடிக்கிறது. அங்கும், சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ஐயப்பன், தொகுதியை தக்க வைக்க அமமுகவில் இணையலாமா? இல்லை அதிமுகவில் இணையலாமா என யோசித்து வருகிறார். மேலும், தொகுதியை கைப்பற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி கதிரவன் ஆகியோர் தரப்பிலும் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
உசிலம்பட்டி தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்தபடியாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக – அமமுக கூட்டணிக்கு பின், தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அமமுகவினர் முனைப்பு காட்டி வரும் அதேநேரத்தில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், அணிகள் இணைந்தாலும் தொகுதி பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது.
ஒரு வேளை இரு தொகுதிகளில் ஒரு தொகுதி கிடைக்காவிட்டால் கூட, அங்குள்ள டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள், அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம். கூட்டணிக்கு எதிராக உள்குத்து நடக்குமென்றும், எங்களுக்குத்தான் நிறைய பேரு இருக்காங்க என்ற ரீதியில் பேசி வருகின்றனர். இது கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படும் சூழலை உருவாக்கி உள்ளது.
