சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 25ம் தேதி (புதன்கிழமை) முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அதிமுக எம்எல்ஏக்களும், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும்,
உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25ம் தேதி மதுரவாயலிலும், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.
