சென்னை: கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, நாடு முழுவதும் ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தன. அதன்படி, செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில், மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜ மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடி 8 முறை வந்தும் பலனளிக்கவில்லை. அதனால் அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வருவது குறித்து திமுகவிற்கு கவலையில்லை. கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. ராகுல்காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும்’ என்றார்.
