சென்னை: வீரப்பனை என்கவுன்டர் புகழ் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சசிகலாவுடன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அவர் அம்பாசமுத்துரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கியவுடன் பல்வேறு நபர்களும் தேர்தல் களத்தில் குதிப்பார்கள். அதில் தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிப்பார்கள். அதேபோலத்தான் வீட்டில் சும்மா இருந்த சசிகலா திடீரென கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
குறிப்பாக தனது தம்பி திவாரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகத்தை தத்தெடுத்து தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்தவர்களை தோற்கடிக்க பண உதவியும் செய்வத்கான பணிகளை தொடங்கியுள்ளாராம். அதன் ஒரு கட்டமாக ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை நேற்று காலையில் சசிகலாவை, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினார்.
அப்போது சசிகலாவின் கட்சியில் சேருவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வெள்ளத்துரையின் ெசாந்த ஊர் அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்தான் வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அம்பாசமுத்திரம் தொகுதியில் வெள்ளத்துரையின் மனைவி போட்டியிட்டார். அப்போது வெள்ளத்துரை நெல்லை நகர கூடுதல் கமிஷனராக இருந்தார்.
மனைவி போட்டியிடுவதால் அவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். திமுக ஆட்சி அமைந்ததும், காஞ்சிபுரம் கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றபோது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தவர் தற்போது சசிகலாவுடன் இணைந்து தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். அரசியலிலும் தீவிரமாக இறங்க உள்ளார். வெள்ளத்துரை ஏற்கனவே சந்தனக்கடத்தல் வீரப்பனை போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து என்கவுன்டர் செய்தார். சென்னையில் அயோத்திக்குப்பம் வீரமணியையும் அவர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
