×

‘எளிமை ஆளமை’ திட்டத்தில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகள்; விரைவில் இணையதளங்கள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: பல்வேறு துறைகளில் 50க்கும் மேற்பட்ட எளிமையாக்கப்பட்ட அரசு சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். விரைவில் இவை இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு, வணிகங்களுக்கு மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையே வழங்கப்படும் சேவைகளை எளிமைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 2023ல்‘‘எளிமை ஆளுமை” என்ற சிறப்பான நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பை தொடங்கியது.

2025ம் ஆண்டு மே 29ம் தேதி முதல்வர் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட இச்சேவைகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக முறையின் நேர்மறையான தாக்கத்தையும் பறைசாற்றியுள்ளன. எளிமை ஆளுமை இரண்டாம் கட்டம் முதற்கட்ட வெற்றியின் தொடர்ச்சியாக, ‘‘தீர்வுசார் நிர்வாகத்தை” நோக்கித் தமிழ்நாடு அரசு அடுத்த அடியை எடுத்து வைக்கிறது. இதன் கீழ், பல்வேறு முக்கியத் துறைகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கூடுதல் சேவைகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கம், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதையும், நீண்ட நேரம் காத்திருப்பதையும் பெருமளவு தவிர்க்கும். இச்சேவைகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘டிஜிட்டல்-முதல்’ அணுகுமுறையில் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011 முதல் நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டத்திற்கானப் பதிவு, தற்போது எளிமையாக்கப்பட்ட வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மகளிர் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி கலப்புத் திருமணம், விதவை மறுமணம், விதவை மகள் திருமணம் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான நிதியுதவித் திட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட மனைவியர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதிய நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவர் காப்பகங்களைப் பதிவு செய்யும் நடைமுறை இனி எளிதாக அமையும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், பராமரிப்பு மானியம், திருமண நிதியுதவி, உயர்மட்ட உதவித்தொகை மற்றும் கடன் உதவித் திட்டங்களுக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர் நல வாரியம் திருமணம், மகப்பேறு, உடல் உறுப்பு இழப்பு, இறப்பு, ஈமச்சடங்கு மற்றும் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போதல் தொடர்பான உதவித் திட்டங்களைப் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் தடையில்லாச் சான்றிதழ், வெளிநாட்டுப் பயண அனுமதி மற்றும் வாகனக் கொள்முதல் அனுமதி போன்ற அகச் சேவைகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் புதுப்பித்தல், பெயர் மாற்றம் மற்றும் முகவரி மாற்றம், அத்துடன் சர்வதேச ஓட்டுநர் அனுமதி மற்றும் நகல் டிஎல்,ஆர்சி வழங்குதல் உள்ளிட்ட எட்டு சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

திருமணமாகாதவர் சான்றிதழ் மற்றும் வேலையின்மைச் சான்றிதழ் போன்ற சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறை உரிமங்களுக்கான நடைமுறை தற்போது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. இதில் ‘சி’ வகை என்பது சுய-சான்றளிப்பு முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு உரிமம் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுக்கான உரிமம் வழங்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சூரியசக்தி மின் அளவீடு பெயர் மாற்றம் மற்றும் தற்காலிக இணைப்புகள் போன்ற சேவைகள் எளிமையாக்கப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மருத்துவ நிறுவனங்கள் பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நடைமுறை வியத்தகு முறையில் எளிமையாக்கப்பட்டுள்ளது. இது ஆய்வகங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் உள்பட அனைத்து மருத்துவ அமைப்புகளுக்கும் பொருந்தும்.

எடை இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்களுக்கான டிஜிட்டல் மற்றும் இதர அனைத்து வகை எடை இயந்திரங்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உர விற்பனையாளர்களுக்கான உரிமம் (மொத்தம், சில்லரை) வழங்கும் முறை எளிமையாக்கப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பச்சை வகை தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான அனுமதிகள், நேரடி கள ஆய்வுகள் இன்றி எளிமையாக்கப்பட்டுள்ளன.

சிப்காட் உற்பத்திப் பொருள் மாற்றம், மேலாண்மை மாற்றம், கூடுதல் நீர் பயன்பாடு, படப்பிடிப்பு அனுமதி, கால நீட்டிப்பு, நில அடமானம் மற்றும் குத்தகை மாற்றம் உள்ளிட்ட 11 வகையான சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் 50க்கும் மேற்பட்ட எளிமையாக்கப்பட்ட அரசு சேவைகளை வெளியிட்டுள்ளார். இவை விரைவில் இணையதளங்கள் வாயிலாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

* முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011 முதல் நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டத்திற்கானப் பதிவு, தற்போது எளிமையாக்கப்பட்ட வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு...