சென்னை: குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில் வருகிற 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ேமலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அரசாணை வெளியிடப்படுகிறது. இதன்படி ஒரு வீட்டிற்கு ரூ.3.5 லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.500 கோடி நிதி விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்ட வழிகாட்டு நெறிமுறை கள்: வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். 300 சதுரடி ஆர்சிசி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும். ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது.
ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும். மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கபடுகிறது. குடிசையில் வாழ்பவர்கள், கேவிவிடி மறு சர்வே பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.
* இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களே சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் (ஊரகம்) 25 முதல் 50 வீடுகள் நிலுவையில் இருந்தால் அந்த ஊராட்சி இந்த ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது. எந்த ஒரு ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஊரக வீடுகள் திட்டத்தில் பழுதுபார்ப்புக்கு எடுக்கப்பட்டிருந்தால் அந்த ஊராட்சிகளும் இதில் சேர்க்கப்பட வேண்டியதில்லை.
