×

ஒன்றிய அரசை கண்டித்து வேலைநிறுத்த போராட்டம் சென்னையில் சாலை, ரயில் மறியல் போராட்டம்: வங்கி, தபால், இன்சூரன்ஸ், வருமான வரி பணிகள் பாதிப்பு: பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கைதாகினர். இதே போல வங்கி, தபால், இன்சூரன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து, நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் 30 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்த போராட்டத்திற்கு ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், தொமுச, விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. சென்னையை பொறுத்தவரை தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 5 இடங்களில் பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 8000 பேர் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில தலைவர் ஜி.சுகுமாரன் தலைமை தாங்கினார். தொமுசவை சேர்ந்த நடராஜன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கொடிகளுடன் வந்து ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கிண்டி தபால் நிலையம் அருகில் சிஐடியுசி அகில இந்திய துணை தலைவர் சவுந்தரராஜன், ஐஎன்டியுசி துணை தலைவர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதேபோல விம்கோ நகரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், பல்லாவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் சாலையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு தேசிய செயலாளர் ஆர்.கருமலையான் தலைமை தாங்கினர்.

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ஐஎன்டியுசி மாநில தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் துணை தலைவர் ஜெயபால் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவொற்றியூர், கிண்டி, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மேலும் தபால்துறை, வருமானவரித்துறை, எல்.ஐ.சி., மத்திய கணக்கு தணிக்கை துறை, அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால், இன்சூரன்ஸ், தபால், வருமானவரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால், வங்கி சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது.

பஸ் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. ஆனால், குறைந்த அளவிலேயே ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: தொழிலாளர்கள் சட்டங்கள் மூலம் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சட்ட வரம்புக்கு வெளியே தள்ள உள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு சாதகமாகவும் எளிதாகவும் வணிகம் செய்ய வைக்க நினைக்கிறது. இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை கொண்டு வந்த தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜ அரசை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய அரசு இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union government ,and rail picket protest ,Chennai ,and rail picket ,
× RELATED தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு...