சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை தவிர்க்க கூடாது என்றும், தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூற கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பைக் ரேஸ், மற்றும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்படுகிறது. ஏற்கனவே பைக் ரேசில் ஈடுபட்டு பழைய குற்றவாளிகளின் விவரங்களை காவல்துறை பராமரித்து வருகிறது.
இதுவரை 107 பேர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அறிவியல் பூர்வ ஆய்வு ஒன்றில் கடந்த 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4லட்சத்து 43ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாளுவதற்கு காவல்துறை ஒரு மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து வருகிற 25ம் தேதிக்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வருகிற தேர்தல் பணியில் தான் கவனம் செலுத்துவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை மேற்கொள்வதை தவிர்க்க கூடாது. தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூற கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
