புதுடெல்லி: இன்றுடன் முடிய இருந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 ஆம் தேதி தொடங்கி ஏப்.2ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வர இருந்தது. அதன்பின் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஆனால் மேலும் 2 அல்லது 3 நாள் பட்ஜெட் கூட்டத்தொடரை நீட்டிக்க ஒன்றிய அரசு விரும்புகிறது.
குறிப்பாக மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்தி, அதில் 273 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த, ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மீண்டும் அவையை கூட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின்படி இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் அவைத் தலைவர்களும், அந்தந்த அவைகளை ஒத்திவைத்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு தேதியில் அவை மீண்டும் கூடும் என்ற அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படாது; மாறாக, குறிப்பிட்ட ஒரு தேதியில் மீண்டும் கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும் என்று ஒன்றிய அரசு வட்டாரம் தெரிவித்தது.
* மக்களவையில் ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா நிறைவேற்றம்
தொழில் புரிவதையும், வாழ்வதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில், பல்வேறு சட்டங்களில் உள்ள சில பிரிவுகளைத் திருத்தி, சிறு குற்றங்களை குற்றமற்றவையாக மாற்றவும், அவற்றை முறைப்படுத்தவும் வகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (பிரிவுகளின் திருத்தம்) மசோதா, 2026 குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 23 அமைச்சகங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் 79 ஒன்றிய சட்டங்களில் உள்ள 784 பிரிவுகளைத் திருத்த இந்த மசோதா முன்மொழிகிறது. இதில் 717 பிரிவுகளைக் குற்றமற்றவையாக மாற்றவும், 67 பிரிவுகளைத் திருத்தி மக்களின் வாழ்வை எளிதாக்கவும் இது முயல்கிறது. மேலும், காலாவதியான மற்றும் தேவையற்ற பிரிவுகளை நீக்குவதன் மூலம், 1,000-க்கும் மேற்பட்ட குற்றங்களை முறைப்படுத்தவும், அதன் வாயிலாக ஒட்டுமொத்த ஒழுங்குமுறைச் சூழலை மேம்படுத்தவும் இம்மசோதா வழிவகை செய்கிறது.
