புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலங்கானா தனி மாநிலமாக உருவானது. அப்போது சட்டப்பிரிவு5(2)ன்கீழ், தற்காலிகமாக இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும், 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, ஐதராபாத் தெலங்கானா தலைநகராக தொடரும் என அறிவிக்கப்பட்டது. அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில தலைநகராக அமராவதியை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், 2019ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இதனை ஏற்காமல், 3 தலைநகர திட்டத்தை கொண்டு வந்தார். இருப்பினும், 2021ம் ஆண்டு 3 தலைநகர் திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி திரும்ப பெற்று கொண்டார்.
இந்த சூழலில் கடந்த 2024ம் ஆண்டு ஆந்திர முதல்வராக சந்திர பாபு நாயுடு மீண்டும் பதவி ஏற்றார். அப்போது நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமராவதி மட்டுமே ஆந்திராவின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகரமாக இருக்கும் என அறிவித்தார். அதனடிப்படையில் கடந்த 20ம் தேதி நடந்த ஆந்திர பேரவை கூட்டத்தில், ஆந்திர தலைநகராக அமராவதியை அங்கீகரித்து சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா 2026ல் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். அதன்மீது விவாதம் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
