முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா: வீடு வீடாக கொடுத்த 5 பேரை பிடித்த ‘பறக்கும் கண்கள்’: தேர்தல் ஆணையம் புது டெக்னிக்

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க இந்தியாவிலே முதன்முறையாக 30 தொகுதிகளிலும் டிரோன்கள் (பறக்கும் கண்கள்) மூல கண்காணிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், பாஜவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடும் மண்ணாடிப்பட்டு தொதிக்குட்பட்ட திருக்கனூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதாக தேர்தல் துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் டிரோன்களை பறக்கவிட்டு கண்காணித்தபோது ​​3 நபர்கள் வீடு, வீடாகச் சென்று பணம் கொடுத்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த பறக்கும் படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 3 பேரை மடக்கி பிடித்தனர். பிடிப்பட்டவர்கல் அப்பகுதியை சேர்ந்த திருமாறன் (36), சிலம்பரசன் (34), திவின் சக்கரவர்த்தி (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் ரூ.55 ஆயிரத்தை கைப்பற்றினர். அவர்கள் 3 பேர் மீதும் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் மங்கலம் சட்டமன்ற தொகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டபோது 2 நபர்கள் வீடு, வீடாக பணம் கொடுத்து கொண்டிருந்தனர்.

பறக்கும் படையினர், சம்பவ இடத்துக்கு சென்றபோது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருந்த 2 நபர்கள் தப்பியோடினர். உடனே, டிரோன் மூலம் அவர்கள் எங்கே ஓடுகிறார்கள் என்று கண்காணிக்கப்பட்டு பறக்கும் படையினர் துரத்தி சென்று பிடித்தனர். அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த ரூ.11,300 மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: