* 4 இடங்களில் மட்டும் சில நிமிடம் பேச பர்மிஷன், பல்வேறு கண்டிஷனால் பிரசார தேதி மாற்றம்
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. தவெகவும், நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தவெக 28 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த வேட்பாளர்களை ஆதரித்து, 5ம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் 23 இடங்களில் ரோடுஷோ பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ம் தேதி சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பியிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையினர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளனர்.
ரோடு ஷோவுக்காக தவெக சார்பில் கேட்கப்பட்ட 4 குறுகிய சாலைகள் உள்பட 19 இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 4 இடங்களில் பல்வேறு நிபந்தனைகளுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கி உள்ள காவல்துறை, அதற்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘3ம் தேதி பிரதமர் மோடி, 5ம் தேதி பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் , 6ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து புதுச்சேரிக்கு வருகின்றனர்.
மேலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வர உள்ளனர். ஒரே நேரத்தில் தலைவர்கள் வரும்போது, பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சூழலில் விஜய் ரோடுஷோவுக்கு அனைத்து இடங்களிலும் அனுமதி தர முடியாது. 4 இடங்களில் பேசலாம். மேலும், நிகழ்ச்சியை 4ம் தேதிக்கு மாற்றுமாறு கோரியுள்ளோம். அந்த தேதியும் தங்களால் உறுதியாக சொல்ல முடியாது. டிஜிபி ஷாலினிசிங் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு பின் முடிவு செய்து தவெகவுக்கு தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட இடத்தில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்க முடியாது. சரியான நேரத்துக்கு வந்து செல்ல வேண்டும். தேர்தல் விதிகளை மீறினால் கட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
இதனால், விஜய்யின் பிரசாரம் 4ம் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, புதுவை தவெக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் கூறுகையில், ‘‘வரும் 4ம் தேதி புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளார். புதுச்சேரி, அரியாங்குப்பம், உழவர்கரை, வில்லியனூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதி கோரியுள்ளோம். இதில் சிக்கல் ஏதுவும் இல்லை’’ என்றார்.
* திருச்சி கிழக்கில் இன்று வேட்பு மனு, பிரசாரம்
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் கடந்த 3ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று (2ம்தேதி) வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த பின் காந்திமார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
