ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்

திருமலை: ஆந்திர மாநில அரசு கைத்தறி தொழிலாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. கைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு பயணளிக்கும். இத்திட்டம் அமராவதியில் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாகம் நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்கள் வரையிலும், (விசைத்தறி) நெசவாளர்களுக்கு மாதம் 500 யூனிட்கள் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். இதன் மூலம், கைத்தறித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மின்சார செலவு சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி செலவாகும். இருப்பினும், கைத்தறி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.04 லட்சம் கைத்தறி குடும்பங்கள் பயனடையும். இலவச மின்சாரம் மூலம் நெசவாளர்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.8,640 சேமிப்பார்கள். அதேபோல், விசைத்தறி நெசவாளர்கள் ஆண்டுக்கு ரூ.21,600 வரை சேமிக்க முடியும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றாலும், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதில் நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நெசவாளர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் சவிதா தெரிவித்தார். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமைச்சர் சவிதா நன்றி தெரிவித்தார். இத்திட்டம் கைத்தறித் துறையை மேலும் வலுப்படுத்தி, தொழிலாளர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை வழங்கும் என அமைச்சர் கூறினார்.

Related Stories: