புதுடெல்லி: மறைந்த புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணா என்ற அபூர்வ ஓவியம் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167கோடிக்கு விற்பனையாகி உள்ளது. மும்பையில், நேற்று முன்தினம் சாப்ரோனார்ட் நிறுவனத்தின் வசந்த கால நேரடி ஏலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஏலத்தில் மறைந்த புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் படைப்புக்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் திகழும் படைப்புக்களில் ஒன்றாக கருதப்படும் யசோதை மற்றும் கிருஷ்ணா ஓவியம் இடம்பெற்று இருந்தது.
இந்த ஓவியத்தில் யசோதா ஒரு பசுவின் பாலைக் கறந்து கொண்டிருக்க, குழந்தை கிருஷ்ணன் அவருக்குப் பின்னால் இருந்து ஒரு பால் குவளையை எட்டிப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி இடம்பெற்ற ஓவியமானது ஏலத்திற்கு வந்திருந்த பார்வையாளர்ளை தன்வசப்படுத்தியது. இந்த ஓவியமானது, ரூ.167.20கோடிக்கு விற்பனையானது.
இதன் மூலமாக ஏலம் ஒன்றில் விற்பனையான நவீன இந்திய கலைப்படைப்புக்களிலேயே அதிக மதிப்புடைய படைப்பு என்ற பெருமையை இந்த ஓவியம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலம் ஒன்றில் எம்.எப் ஹூசைனின் பெயரிடப்படாத ஓவியம் ரூ.118 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனையை படைத்தது. ரவி வர்மாவின் ஓவியம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
