நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காங்கிரஸ் எம்பிக்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதியில் ஆதிக்கம் செலுத்தியதற்காக காங்கிரஸ் எம்பிக்களுக்கு ராகுல்காந்தி நேற்று பாராட்டு தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி நேற்று நிறைவுக்கு வந்தது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியபோது,’ பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில் மக்களின் கவலைகளை எழுப்பியதற்காக அனைத்து எம்பிக்களுக்கும் பாராட்டுகள். முதல் பாதி கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் அரசாங்கத்தை முறியடிக்க முடிந்தது.

இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒரு விற்பனை ஆகும். இந்த செய்தியை தொலைதூர மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எம்.பி.க்கள் விவசாயிகளுடன் வலுவாக நிற்க வேண்டும். மக்களின் பிரச்சினைக்காக கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களையும் ஒரு மாா்க்சிஸ்ட் எம்பியையும் பாராட்டுகிறேன்’ என்றார்.
சபாநாயகருக்கு எதிராக அவதூறா?

சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறையில் காங்கிரஸ் எம்பிக்கள் அவதூறாக பேசியதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டினார். இதுதொடர்பான படத்தையும் அவர் வெளியிட்டார். அப்போது அறையில் இருந்த காங். பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி ஆகியோர் அவர்களை தடுக்கவில்லை. மாறாக தூண்டிவிடுகிறார்கள் என்று கிரண் ரிஜிஜூ கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,’ நாங்கள் யாரையும் துஷ்பிரயோகம் செய்யவில்லை’ என்றார்.

Related Stories: