விருத்தாசலம், ஜன. 24: கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களாக கடலூர் மத்திய மாவட்ட தலைவர் ரங்கமணி, கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மேற்கு மாவட்ட தலைவராக விருத்தாசலம் லாவண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லாவண்யா தலைவராக நியமிக்கப்பட்டதால் மேற்கு மாவட்ட பகுதிகளில் காங்கிரசாரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதில், விருத்தாசலம் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஒன்றுசேர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல், தனக்கு ஏற்ற ஒருவரை, மேற்கு மாவட்ட தலைவராக கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் அரும்பாடுபட்டதாகவும், ஆனால் எம்எல்ஏ தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மேற்கு மாவட்ட தலைவர் லாவண்யாவை நீக்காவிட்டால், கட்சித் தலைமைக்கு சென்று போராடுவோம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், விருத்தாசலம் தொகுதியிலுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் கட்சி வேலை செய்ய மாட்டோம் என தெரிவித்தனர். விருத்தாசலம் பகுதி காங்கிரஸ் கட்சியில் இருஅணியாக செயல்படுவதால் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ள நிலையில நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் மாநில தலைமை ஈடுபட்டுள்ளது.
