மானாமதுரை புறநகர் பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறு: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் வைகை ஆற்றுநீர் கிடைக்காத புறநகர் பகுதிகளுக்காக ரூ.38 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை 3, 4-வது வார்டுக்கு உட்பட்டது அன்புநகர், அண்ணாமலைநகர், ராம்நகர் பகுதிகளாகும். சிவகங்கை மெயின்ரோட்டில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ரோடு வழியாக பட்டத்தரசி கிராமத்திற்கு செல்லும் வழியில் இருந்த நிலங்களில் தற்போது 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த இடங்கள் அன்புநகர், அண்ணாமலைநகர், ராம் நகர் என்று அழைக்கப்படுகிறது. நடுத்தர மக்கள் இப்பகுதியில் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர்.

சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கும் இப்பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக (அப்போதைய பேரூராட்சி) நிர்வாகம் சார்பில் வைகை ஆற்று குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். அன்புநகர் மெயின் ரோட்டில் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை வரும் குடிநீர் திட்டம், உள்பகுதியான அன்புநகர் வடக்கு, அண்ணாமலைநகர், ராம்நகர் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் ரோடு, தெருவிளக்கு வசதிகள் இருந்தும் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் மானாமதுரை நகராட்சியாக மாற்றப்பட்ட நிலையில், ரூ.38 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 27 வார்டுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதில், விரைவில் தண்ணீர் ஏற்றப்பட்டு அன்புநகர், அண்ணாமலை நகர், ராம்நகர், சாஸ்தா நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குமார் கூறுகையில், `திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அன்புநகர், ராம்நகர், அண்ணாமலைநகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு வசதிகள், சிமென்ட், தார் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. மேலும் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்கவும் நகராட்சி நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்கிறோம்’ என்றார்.

Related Stories: