பதின் பருவ காதலால் பாதிக்கப்படும் மாணவர்கள்; ஒற்றை ரோஜாவுக்காக பூந்தோட்டத்தை இழக்கக் கூடாது: கல்வியாளர்கள் அறிவுரை

 

சிறப்பு செய்தி

உலகளவிலான நாடுகளில் ஒவ்வொரு விதமான பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஒரு சில நாட்களை அனைவருமே கொண்டாடுகின்றனர். அந்த வகையில் அன்பை பரிமாறிக் கொள்ளும் காதலர் தினத்தை உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். அப்படி எந்த நாளுக்கு என்ன மகத்துவம் என்று சற்று பின்னோக்கி பார்த்தால் அதன் உண்மை புரியும். ஒவ்வொரு தினத்தையும் நாம் கொண்டாடும் போது அதற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு புதைந்துள்ளது. அந்த வகையில் காதலர் தினத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. காதலர் தினத்தின் தோற்றம் ரோம பேரரசு காலத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. கி.பி. 3ம் நூற்றாண்டில் ரோம நாட்டை ஆட்சி செய்த கிளாடியஸ் என்ற மன்னன், இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் போரில் தைரியமாக செயல்பட மாட்டார்கள் என்று நம்பினார். அதனால் இளைஞர்களின் திருமணத்தைத் தடை செய்ததாக கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த வாலண்டைன் என்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் இத்தடையை மீறி ரகசியமாக இளைஞர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இதை அறிந்த மன்னன், வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அவர் உயிரிழந்த தினம் பிப்ரவரி 14 என்று நம்பப்படுகிறது. அவரது நினைவாகவே அந்த நாளை “செயின்ட் வாலண்டைன் தினம்” என்று கொண்டாடத் தொடங்கினர். பின்னர் காலப்போக்கில் இந்த நாள் காதலர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள், மலர்கள், பரிசுகள் வழங்கும் நாளாக மாறியது. குறிப்பாக 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் பரிமாறும் வழக்கம் அதிகரித்தது. இன்று உலகம் முழுவதும் இந்நாள் காதலர்களுக்கு மட்டுமல்லாமல் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் நாளாகவும் மாறியுள்ளது. இவ்வாறு, ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான காதலர் தினம், இன்று உலகளாவிய கொண்டாட்டமாக வளர்ந்து, மனிதர்களிடையே அன்பையும் உறவுகளையும் வலுப்படுத்தும் நாளாகத் திகழ்கிறது. மாற்றம் என்பது எப்படி மாறாததோ, அதேபோன்று கால சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் பழக்க வழக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் காதலும் விதிவிலக்கல்ல. ஒரு காலகட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பிடித்திருந்தால் கூட அதை வெளிப்படையாக அவளிடம் கூற மாட்டான்.

அதேபோன்றுதான் பெண்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்களுக்குள் காதல் இருந்து வந்தது. காலங்கள் மாற மாற தற்பொழுது ஆண்களும் சரி, பெண்களும் சரி எளிதில் காதல் வயப்படுகின்றனர். அதைவிட மிக அவசரமாக அதை வெளிப்படுத்தி விடுகின்றனர். இதனால் காதல் என்பது தற்போது அரிதான ஒன்றாக இல்லாமல் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் காதல் என்ற பெயரில் பல்வேறு அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக மாற்றம், சமூக வலைதளங்களில் அபரிவிதமான வளர்ச்சியால் இன்று காதலர் தினம் கொண்டாட்டம் என்பது ஒரு கவர்ச்சியாகவும் ஒரு வியாபார யுத்தியாகவும் மாறிப் போய் உள்ளது. இந்த காலகட்டத்திலும் அன்பை மட்டும் பரிமாறிக் கொண்டு வாழும் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவு. இதைவிட ஆண் பெண் உடல் தேவைக்காகவும், வியாபார யுக்திகளுக்காகவும் தான் தற்போது காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.

காதலர் தினம் குறித்து கொளத்தூரை சேர்ந்த மாணவர் மனநல ஆலோசகரும், கல்வியாளருமான வனிதா கூறியதாவது: ‘காதல் என்பது தவறான விஷயம் கிடையாது. அதே நேரத்தில் அது சரியான வயதில் சரியான நபரிடம் வரவேண்டும். கடந்த 15-20 வருடங்களாக தான் இந்த காதலர் தினம் என்பது ஆண்டுதோறும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் இந்த நாள் வந்து போனது, ஆனால் இவ்வளவு கொண்டாட்டம் இல்லை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. எல்லாமே விளம்பரம், வர்த்தக ரீதியாக பார்க்கப்படுவதால் சாதாரண நாட்களில் ஐந்து ரூபாய்க்கு விற்கக்கூடிய ஒரு ரோஜா மலர், காதலர் தினம் அன்று அதே ரோஜாவை 50 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு கூட ஆட்கள் வருகிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள வியாபார யுத்திகளையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஒரு நாள் மட்டும் வெளிப்படுத்தக் கூடியது அன்பு கிடையாது.

படிக்கும் வயதில் உள்ள மாணவர்கள் முதலில் தங்களது இலக்கை அடைந்த பிறகு தான் எதிர்பாலின ஈர்ப்பு என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். 16 வயதிலிருந்து 20 வயதுக்குள் மூளையின் செயல்பாடு அதிதீவிரமாக இருக்கும். இந்த காலகட்டம் ஹார்மோன்ஸ் மற்றும் மூளையின் செல்கள் முழு ஈர்ப்போடு இருக்கக்கூடிய காலகட்டம். அந்த காலகட்டத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சக்திகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும். அந்த சக்திகளை ஆக்கபூர்வமாக செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். அது படிப்பாக இருக்கலாம் விளையாட்டாக இருக்கலாம் அல்லது திறன் மேம்பாடாக இருக்கலாம். அப்படி அவர்கள் இந்த வயதை பயன்படுத்திக் கொண்டால் 25 வயதிற்குள் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அவ்வாறு வந்ததுக்கு பிறகு அந்த எதிர்ப்பாலின ஈர்ப்பு வரும் பட்சத்தில் எது தவறு எது சரி என்பதை அவர்களால் நன்கு உணர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும். எனவே ஆணும் பெண்ணும் ஒரு நல்ல புரிதல் வந்த பிறகு ஒரு காதல் வந்தால் அதை யாரும் தவறு என்று சொல்வது கிடையாது. ஆனால் வெளித்தோற்றத்தை பார்த்தோ அவர்களது சூழலை பார்த்தோ வருவதை காதல் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இளம் பருவத்தில் ஆணும் பெண்ணும் செய்யும் காதல் உண்மையான காதல் என்றால், அவர்கள் நீதிமன்றத்தை நாடி விவாகரத்துக்காக நிற்க மாட்டார்கள். குடும்பத்தை விட்டும் பிரிய மாட்டார்கள், குடும்பத்தையும் பிரிக்க மாட்டார்கள். உண்மையான அன்பு என்பது வார்த்தையில் இல்லை, வாழ்க்கையில் உள்ளது. சங்க காலங்களில் இருந்தே தமிழ் இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களில் காதலுக்கு எதிர்ப்பான விஷயங்கள் எதுவுமே கிடையாது. வில்லியம் ஷேக்ஸ்பியர் முதல் திருவள்ளுவர் வரை அனைவரும் அன்பை பரிமாறிக் கொள்கின்ற ஒரு புனிதமான நிகழ்வாக தான் காதலை பார்த்தனர். ஆனால் அது எந்த வயதில் யாரிடம் அந்த ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதுதான் முக்கியம். பெற்றோரை ஏமாற்றி தங்களை நம்பியவர்களை ஏமாற்றி தங்களுடைய எதிர்காலத்தை பனையம் வைத்துவிட்டு ஒரு எதிர்ப்பாலின ஈர்ப்பு என்பது தெரிந்தே ஒரு குழிக்குள் விழுகின்ற மாதிரி. அதை இந்த இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.

பதின் பருவங்களில் ஏற்படக்கூடிய ஒரு ஈர்ப்பை சிலர் உண்மையான காதல் என்று நம்பிக் கொண்டுள்ளனர். 16, 17 வயதில் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணுக்கு அவர்களது முகத்தோற்றம் மற்றும் உடல் தோற்றம் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. அவர்களது எலும்புகளும் தசைகளும் இன்னும் முழுமையான வளர்ச்சியை அடையவில்லை. அவர்கள் நினைத்துக் கொள்ளலாம் நான் வளர்ந்துவிட்டேன் பெரிய ஆளாகி விட்டேன் என்று ஆனால் அது முற்றிலும் தவறு. அவர்களது உடலில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படும். 16 வயதில் கண் கவர் தோற்றமாக உள்ள ஒரு பெண் 24 வயது சாதாரண தோற்றமாகவும் மாறக்கூடும். எனவே தோற்றத்தை வைத்து இளைய தலைமுறையினர் காதலில் விழக்கூடாது. நமது உடலில் உருவமும் வடிவமும் ஒரு முழுமை அடைந்த பிறகு நேசிப்பதை பற்றி யோசிங்கள்.‌ அப்படி ஒரு ஈர்ப்பு வருகிறது என்றால் அதனை கடந்து செல்லக்கூடிய பக்குவம் இளைய தலைமுறையினருக்கு வர வேண்டும்.

ஒரு பயணம் சென்று கொண்டிருப்போம், வெளியில் அழகான காட்சிகளை நாம் கண்டு ரசிப்போம்.‌ அப்போது ஒரு அழகான மலரை ரசிப்போம், மலர் அழகாக உள்ளது என்று பயணத்தை ரத்து செய்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி அந்த மலர் பக்கத்தில் அமர்ந்து கொண்டால் நம்மை விட்டு விட்டு அந்த பேருந்து சென்றுவிடும். ஒரு மலருக்காக பேருந்தை விட்டு விட்டோமே என்று எண்ணும்போது வாழ்க்கையும் அப்படித்தான் தொலைந்து போய் நிற்கும். அழகான மலரை ரசிக்க கூடாது என்று கூறவில்லை, ஆனால் வண்டியில் இருந்து இறங்குவது முட்டாள்தனம். எப்படி கடந்து போகிறோமோ, அது போன்று சில நேரங்களில் சில மனிதர்களை கடந்து போக வேண்டும். உங்கள் இலக்குகளை நீங்கள் முழுமைப்படுத்திக் கொண்டால் உங்களுக்கான அழகான பூந்தோட்டம் காத்துக் கொண்டுள்ளது. ஒற்றை மலருக்காக ஏன் பூந்தோட்டத்தை நீங்கள் இழக்க வேண்டும் என்பதை இளைய தலைமுறையினர் சிந்தித்து பார்க்க வேண்டும்.‌ ஒரு மலருக்காக உங்களது வாழ்க்கையை நீங்கள் ஏன் பணையம் வைக்கிறீர்கள். பயணம் முக்கியமா அல்லது பனையம் முக்கியமா என்பதை இளைய தலைமுறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தோற்றத்திற்காக ஒருவரை விரும்பி விட்டேன் அதன் பிறகு அவரை பிரியும்போது கண்டிப்பாக அது ஒரு வலியை ஏற்படுத்தும்.‌ அந்த வலி ஏற்படும் போது உடலும், மனதும் மிகவும் சோர்ந்து விடும். எனவே படிக்கின்ற மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது அந்த வலியை ஏன் வாங்கிக் கொள்கிறீர்கள். 24 வயதிற்கு மேல் வரும் காதல் அனைத்தும் வெற்றி அடைந்துவிடும் என்று கூறவில்லை. ஆனால் அது தோல்வி அடைந்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் அப்போது உங்களுக்கு இருக்கும். இந்த புரிதலோடு புன்னகையோடு காதலர் தினத்தை கடந்து போக வேண்டும். வாழ்க்கை முழுவதும் வரப்போகிறவர்கள் தன்னை மட்டும் பிடித்திருந்தால் போதும் என்று பார்க்காமல் தனது குடும்பத்தையும் பிடித்து வாழ்க்கை முழுவதும் குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்பதை இளைய தலைமுறை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நீ மட்டும் போதும், உனது குடும்பம் வேண்டாம் என்று கூறுபவர்கள் பலர் உள்ளனர். அது எவ்வாறு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையாக இருக்க முடியும். அது முழுமை அடையாது.

வாழ்க்கையில் காதல் ஒரு பகுதி. பகுதி என்றுமே முழுமையாகாது, என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் ஒவ்வொரு பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வந்துவிட்டால் காதல் என்பது ஒரு அழகான நிகழ்வாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அமிர்தமே நஞ்சாகும் போது எது நஞ்சு என தெரியாமல் நீங்கள் ஏன் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கான மகிழ்வு கண்டிப்பாக முக்கியம் தான். அதற்காக குடும்பம் என்பதை மறந்து விட்டு செல்வது என்பது அபத்தமானது. தற்போது காதலுக்கான வரையறை மாறி வருகிறது. ஒப்பனை தான் காதல், ஊர் சுற்றுவது தான் காதல், செலவு செய்வது தான் காதல், பரிசு பொருட்கள் வாங்கி தருவது தான் காதல், என்று காதலுக்கு பல இலக்கணங்களை தற்பொழுது இளைய தலைமுறையினர் மாற்றி வருகின்றனர். ஆனால் எந்தவித ஒப்பனையும் இல்லாதது தான் உண்மையான காதல் என்பதை இளைய தலைமுறையினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Related Stories: