தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து தலையை துவட்டுவதையும், அதன்பிறகு தூயஉடை அணிந்து வேலைக்கோ அல்லது இதர அலுவல்களுக்கோ செல்வதையும் நாம் வாடிக்கையாக வைத்துள்ளோம். நாம் குளிப்பதற்கு ஷாம்பு, ேசாப்பு போன்றவை எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல் தலையை துவட்டுவதற்கு துண்டு என்பதும் மிகவும் அவசியம். இப்படி நாம் தலையை துவட்ட பயன்படுத்தும் துண்டு குறித்த ஆய்வுகள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டொகுஷிமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தண்ணீர் மற்றும் துண்டுகள் குறித்த ஆய்வுகள் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், ‘‘நாம் குளித்த பின்னர் துடைப்பதற்காக பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும்.
துண்டுகளில் உள்ள மென்மையான இழைகள், அதில் அழுக்கு இருப்பதற்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்காது. ஆனால், பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வளர்வதற்கான இடமாக அது இருக்கும். நம்முடைய துண்டுகள், மனித குடல் மற்றும் தோலில் பொதுவாகக் காணப்படும் பாக்டீரியாக்களால் மாசடைகிறது,’’ என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாம் குளித்த பின்னர் கூட நமது உடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கும். நமது உடலை துடைக்கும்போது அந்த நுண்ணுயிரிகள் துண்டுக்கு இடம்பெயர்ந்துவிடும். ஆனால், நமது துண்டில் காணப்படும் நுண்ணுயிரிகள் வேறு ஆதாரங்களின் வழியே கூட வரும். அதாவது காற்றின் வழியாக பரவும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட துண்டின் இழையில் ஒட்டிக்கொள்ளும். மேலும், நாம் அந்த துண்டை துவைக்கப் பயன்படுத்தும் தண்ணீரிலிருந்தும் பாக்டீரியாக்கள் துண்டில் ஒட்டிக்கொள்ளும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாக்டீரியா ஆய்வுகள் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நம்முடைய தோலில் ஏராளமான வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் தவிர்த்து ஆயிரக்கணக்கிலான வெவ்வேறு இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் இருக்கிறது. அதில் பெரும்பாலானவை நமக்கு நன்மையையே பயக்கும். அவை, நம்மை மற்ற தீமை பயக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கும் உதவிபுரியும். மேலும், அவை நமது நோயெதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம்முடைய துண்டுகளில் காணப்படும் பெரும்பாலான பாக்டீரியாக்கள், நம் தோலில் காணப்படும் பாக்டீரியாக்கள்தான். எனினும், அவை நம்முடைய சுற்றுபுறத்திலும் பொதுவாகக் காணப்படுகின்றன. இவற்றுள் ஸ்டாபைலோகோக்கஸ் பாக்டீரியா மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எஸ்செரிஷியா கோலி ஆகியவையும் அடங்கும். மேலும், உணவால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள் மற்றும் வயிற்றுப்போக்குக்குக் காரணமான சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா பாக்டீரியாக்களும் துண்டுகளில் காணப்படுகின்றன.
இவை சில சமயங்களில் தீங்கை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளாக உள்ளன. அதாவது, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளுக்குள் அவை நுழையாதவரை தீங்கற்றதாக உள்ளன. உதாரணமாக, நம் உடலில் ஏதேனும் வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதற்குள் இந்த பாக்டீரியாக்கள் நுழைந்து சில நச்சுகளை உற்பத்தி செய்கின்றன அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து துண்டுகளை துவைத்து சுத்தமாக வைத்திருப்பது, பாக்டீரியா தொற்றுகளை குறைக்கும். அதன்மூலம், ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடும் குறையும்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது நோய் தடுப்பு வழிமுறைகளுள் ஒன்று. அதேபோல் நாம் பயன்படுத்தும் துண்டுகளையும் ஓரிருநாட்கள் இடைவெளியில் நன்றாக துவைத்து உலர்த்திய பிறகு தலை துவட்ட பயன்படுத்த வேண்டும். சிகிச்சையை விட சிறந்தது நோய்கிருமிகள் பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் தான். இதை உணர்ந்து நாம் உபயோகப்படுத்தும் துண்டுகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
பயோபிலிம்களை உருவாக்கி விடும்
‘‘சில வீடுகளில் குளிப்பதற்கு பயன்படுத்தி மீதமுள்ள தண்ணீரையே அடுத்த நாள் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இப்படிச் செய்வது தண்ணீரை சேமிப்பதற்கான வழி என்றாலும், அந்த தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் துண்டு மற்றும் ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும், கழிவறையிலேயே தங்களது துண்டை காய வைப்பவர்களுக்கு இன்னுமொரு அருவருப்பான செய்தி உள்ளது. அதாவது, கழிவறையை உபயோகித்த பின்னர் ஒவ்வொருமுறை பிளஷ்ஷை அழுத்துகிறீர்கள். அப்போது அங்கு காயவைக்கப்பட்டிருக்கும் துண்டில், உங்கள் குடும்பத்தினரின் உடலின் கழிவுகளின் எச்சங்களுடன் நீங்கள் பாக்டீரியாக்களை பரவவிடுகிறீர்கள். காலப்போக்கில் இந்த நுண்ணுயிரிகள் பயோபிலிம்களை உருவாக்கும்,’’ என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
உடல் நலத்திற்கு நல்ல பலன் தரும்
பயோபிலிம்கள் என்பது நுண்ணுயிரிகள் உருவாக்கும் மெல்லிய அடுக்கு. இது துண்டின் தோற்றத்தையே மாற்றிவிடும். இரண்டு மாதங்களுக்குப் பின், நீங்கள் துண்டை தினமும் துவைத்தாலும் பருத்தி துண்டுகளின் இழைகளில் உள்ள பாக்டீரியாக்களால், அந்த துண்டின் தோற்றம் மங்கிவிடும். நாம் வீட்டில் துண்டை எப்படி துவைக்கிறோம் என்பதைப் பொறுத்து, பாக்டீரியாக்கள் எந்தளவுக்கு இருக்கும், என்ன வகையான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பது மாறுபடும். உங்கள் துண்டுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் குறித்து நீங்கள் எந்தளவுக்குக் கவலைப்பட வேண்டும் என்பது தான் முக்கியமான கேள்வி. துண்டை துவைப்பது குறித்து விவாதிப்பது அற்பமானதாக இருக்கலாம். ஆனால் அதை சுத்தமாக துவைத்து உபயோகப்படுத்துவது உண்மையில் உடல்நிலைக்கு நல்ல பலன் தரும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
பருத்தி துணியில் அதிகம் உயிர்வாழும்
‘‘பருத்தித் துணியில் நுண்ணுயிரிகள் 24மணிநேரம் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எம்பாக்ஸ் என்னும் நுண்ணுயிரி மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் துண்டுகளை பரிமாறிக்கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர். மருக்கள் போன்றவற்றுக்கு பொதுவான காரணமாக கருதப்படும் பாபில்லோமா நுண்ணுயிரி மற்றவர்களுடன் துண்டுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் பரவுகிறது. துண்டுகள் மூலம் தொற்றுகள் பரவுகிறது என்பதால்தான் மருத்துவமனைகள் மற்றும் பொதுக்கழிவறைகளில் தற்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் காகிதத் துண்டுகளும் ஏர் டிரையர்களும் பயன்படுத்தப்படுகின்றன,’’ என்பதையும் மக்கள் உணரவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒருமுறை துவைக்கும் இந்தியர்கள் 20% பேர்
‘‘இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 20% பேர், தங்களது துண்டுகளை வாரத்திற்கு இருமுறை துவைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இப்படி குறிப்பாக மேற்கொள்ளப்படும் சுகாதார வழிமுறையை ‘டார்கெட்டட் ஹைஜீன்’ என்கின்றனர். இது சுகாதார துறையில் ஆபத்தைக் கையாளும் ஒரு வழிமுறையாகும். டிடர்ஜென்ட்டுகள் துணிகளில் பாக்டீரியாக்கள் புகாமல் செய்யும். சில வைரஸ்களை செயலிழக்கவும் செய்யும். அதிக வெப்பநிலையில் தொடர்ச்சியாக துவைப்பது, சூழலியல் ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும். குறைவான வெப்பநிலையில் துவைக்கும்போது நொதிகள் சேர்த்தோ அல்லது பிளீச் செய்யும்போதோ துண்டுகளில் பாக்டீரியாக்கள் தங்காமல் சுத்தம் செய்ய முடியும். டிடர்ஜென்ட் மற்றும் கிருமிநாசினி சேர்த்து சூரிய வெப்பத்தில் துண்டுகளை காய வைப்பது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை குறைப்பதில் மிகுந்த செயலாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.
