அரிய படைப்புகளுக்கு காப்புரிமை கேட்காத மாமனிதர்; சிரமங்களை சுமந்து இடிதாங்கியை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின்: நாடு, இனம், மொழி கடந்து அறிவது அவசியம்

 

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் சிறப்பானது. இந்த வகையில் கடந்த காலங்களில் வந்த நாட்கள், இந்த பூமிக்கு அரிய சாதனையாளர்களை கொடுத்துள்ளது. நாடு, மொழி, இனம் என்ற பேதம் கடந்து உலகளவிலும் அவர்கள் மனங்களில் நிறைந்து நிற்கின்றனர். இந்தவகையில் நேற்று (17ம்தேதி) இடிதாங்கியை உலகிற்கு வழங்கிய பெஞ்சமின்பிராங்க்ளின் பிறந்தநாள், அவரது சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாழ்க்கை சூழல், மனிதர்கள் சாதிப்பதற்கு ஒரு தடையல்ல. முயற்சியே நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உதாரணபுருஷர் அவர். எனவே அவரது வாழ்வியல் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகள் அறிந்திருப்பது அவசியமான ஒன்று என்கின்றனர் வரலாற்று முன்னோடிகள்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் அமெரிக்கா இருந்த காலத்தில் சோப்பு தயாரிக்கும் ஒரு எளிய குடும்பத்தில் 11குழந்ைதகள் இருந்தனர். அவர்களில் பத்தாவதாக பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். குடும்பச்சூழல் இவரை, ஓராண்டிற்கு மேல் பள்ளிக்கு செல்லவிடவில்லை. இதனால் அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலை செய்தார். கல்வியை தானாகவே கற்றுக்கொண்டு பெண்உரிமை குறித்தும், மோசடிகள் குறித்தும் அச்சு பிரசுரங்களை வெளியிட்டார். இதனால் சிறை சென்றவரை, மீண்டும் வீட்டிற்குள் நுழைய, குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு எங்கெங்கோ அலைந்து திரிந்து, சிரமத்தின் உச்சத்திற்கு ெசன்று கடும் முயற்சியால் பத்திரிகை ஒன்றை தொடங்கினார். முதன்முதலில் பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள், விளம்பரங்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இதேபோல் அமெரிக்காவில் தீவிபத்தில் இருந்து மக்களை காப்பதற்கு ஒரு நிறுவனத்தை தொடங்கினார். காப்பீடு என்பதை முதலில் செயல்படுத்தியவரும் இவரே. இந்தச்சூழலில் கொட்டும் மழையில் பட்டம்விட்ட போது, உடம்பில் ஒரு அதிர்வு உருவானதை உணர்ந்தார். அந்தநேரத்தில் தான், உலோக கம்பி மழையில் நனையும் ேபாது, மின்னலில் இருந்து மின்சாரத்தை கடத்துகிறது என்பதையும் உணர்ந்தார். அதை வைத்து கட்டிடங்களை இடியில் இருந்து இடிதாங்கிகள் மூலம் காக்கலாம். கூர்மையான முனைகள் இருந்தால் இடியின் போது கடத்தப்படும் மின்சாரத்தை அந்த கூர்மையான கம்பியே வாங்கிக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மையை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினார். இப்படி இடியின் தாக்குதலில் இருந்து பலகட்டிடங்கள் தப்பிப்பதற்கு வழிவகுத்தவர் பெஞ்சமின்பிராங்க்ளின்.
இது மட்டுமன்றி சந்தாகட்டி நூலகத்தில் சேரும் முறையை கொண்டு வந்ததும் இவரே.

இவரின் கண்டுபிடிப்பை வைத்தே பிரபலமான மக்கள் தொகை கொள்கை உருவானது. மேலும் அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை ஜெபர்சனுடன் இணைந்து தயாரித்ததும் இவர் தான். தனது வாழ்நாளில் எத்தனையோ கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த போதும் அதற்கெல்லாம் காப்புரிமை பெறவில்லை. தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலக மக்கள் அனைவருக்கும் உதவியாக இருக்க வேண்டும். அதற்கு காப்புரிமை ஒரு தடையாக இருக்ககூடாது என்று பெருந்தன்மையுடன் அறிவித்த மாமனிதர் பெஞ்சமின்பிராங்க்ளின்.

இப்படி ஏழ்மையான குடும்பச்சூழல், புறக்கணித்த வாழ்க்கைச்சூழல், தொடர்ந்து வந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி சாதனைகளுக்கு வித்திட்டவர். அந்த சாதனைகள் தனக்கு மட்டுமே உரியது என்று சொந்தம் ெகாண்டாடாமல் உலகநன்மைக்கு அர்ப்பணித்தவர் அவர். இத்தகைய பெருமைமிகு பெஞ்சமின்பிராங்க்ளின், வாழ்வியலை நாடு, இனம், மொழி என்ற எல்லைகள் கடந்து நாமும், நமது தலைமுறைகளும் போற்றுவது ஆரோக்கியமானது என்கின்றனர் வரலாற்று முன்னோடிகள்.

Related Stories: