திட்டமிடாத கர்ப்பங்களால் திடீர் முடிவு; இந்தியாவில் கருக்கலைப்புகள் 5 ஆண்டுகளில் 67% அதிகரிப்பு; பாதுகாப்பு அவசியம்

 

மகப்பேற்றுக்காக தம்பதியர் ஏங்கித்தவிக்கும் இன்றைய சூழலில் கருக்கலைப்புகள் என்பதும் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள் கருத்தரித்த பிறகு கருவின் ளர்ச்சியை நிறுத்துவதே கருக்கலைப்பு எனப்படுகிறது. இந்த கருக்கலைப்பு என்பது நாடு முழுவதும் சமீபஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (2021-2025) வழக்கத்தை விட, கருக்கலைப்புகள் 67 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

அதாவது 2021ல் 5.4 லட்சம் கருக்கலைப்புகள் நடந்துள்ளது. 2025ம் ஆண்டில் இது 8.93 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிகளவு கருக்கலைப்புகள் பதிவு செய்யப்படுகிறது. தெலங்கானா போன்ற மாநிலங்களில் மிக, மிக அதிகளவில் (917%) கருக்கலைப்புகள் நடக்கிறது. சுகாதார வசதிகளின் பயன்பாடு அதிகரிப்பு, திட்டமிடாத கர்ப்பம், தவறான கருத்தடை, பொருளாதார சிக்கல் போன்றவை, இதற்கான முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பதிவு செய்யாமலும், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்வோரின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: கருக்கலைப்பு என்பது மருத்துவ ரீதியில் பல்வேறு காரணங்களால் செய்யப்படுகிறது. குறிப்பாக பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர், குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு பெண்ணுக்கு உடல் தகுதி இல்லாத சூழல், வளரும் கருவில் உள்ள சிசு ஆரோக்கியமின்மை, கர்ப்பமடைந்த பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதுதவிர்த்து சமூக பொருளாதார காரணங்களால் குழந்தை பிறப்பை சிலர் தள்ளி வைக்கும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்புகின்றனர்.

தம்பதியர் பாதுகாப்பற்ற முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது கருத்தரித்தால், கருக்கலைப்பு செய்கின்றனர். அதேபோல், இரண்டு குழந்தைகள் வைத்துள்ளவர்கள் குடும்ப சூழல், பொருளாதார காரணங்களாலும் கருக்கலைப்பு செய்கின்றனர். இன்றைய நவீன மருத்துவ வசதிகளின் காரணமாக, கருவில் உள்ள சிசுவை கண்டறிந்து பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் கருக்கலைப்பு செய்யும் நிலையும் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் பாதுகாப்பான முறையில் இந்த கருக்கலைப்புகளை செய்வதே மிகவும் நல்லது. கருக்கலைப்பு இயற்கையாகவோ அல்லது நோயின் காரணமாக நிகழும் போது உயிரிழப்பு ஏற்படுவதில்லை.

மாறாக செயற்கையான முறையில் கருக்கலைப்பு செய்யும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. 7வாரங்களுக்குள் உள்ள கர்ப்பத்தை மிக எளிதாக சட்ட ரீதியாக மாத்திரைகள் மூலம் கருக்கலைப்பு செய்ய முடியும். அதேபோல், உறிஞ்சு குழாயின் வழியாக கருக்கலைப்பு செய்யப்படும். 6 முதல் 8 வார கர்ப்பங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 முதல் 12 வார கர்ப்பத்தை அரசு மருத்துவமனைகளில் செய்யலாம். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

65,000 பேர் கருக்கலைப்பு
தேசிய சுகாதார புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 65ஆயிரம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்தாண்டு (2025) ஜூன் மாதம் வரை 19வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 3லட்சத்து 28 ஆயிரத்து 970 பேருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒப்பிடும் போது கருக்கலைப்பில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாம் இடத்தில் சேலமும், 3ம் இடத்தில் ஈரோடு மாவட்டமும் உள்ளது. சேலம் சரக அளவில் பார்க்கும் போது, சேலம் மாவட்டத்தில் 22ஆயிரத்து 707 பேருக்கும், தர்மபுரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 846 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 583 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9ஆயிரத்து 403 பேருக்கும் என்று மொத்தம் 51ஆயிரத்து 539 பேருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கான மையம்
‘‘தமிழகம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் குடும்பநலத்துறையின் துணை இயக்குநர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன், மருத்துவ கண்காணிப்பாளர், மகப்பேறு மருத்துவர், கதிரியக்கவியல், குழந்தைகள், இருதயவியல், நரம்பியல், மனநல ஆலோசகர், அறுவை சிகிச்சை, மயக்கவியல், பொதுநல மருத்துவம் ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் தலைமையில் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு உறுப்பினர்கள் மூலம் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது,’’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

காரணம் ஏராளம்
‘‘கருத்தரிப்பதை தாமதமாக அறிதல், சமூக கலாச்சார பழக்கங்கள், குடும்ப தடைகள், பிறரிடம் சொல்ல தயக்கம், குடும்பத்தினரிடையே குற்ற உணர்வு, இளம்வயதில் திருமணம், திருமணத்திற்கு முன் உறவு, ஆண் குழந்தை பெற வேண்டிய சமூக நிர்பந்தங்களால் பாதுகாப்பற்ற முறையில் பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்காக சில சட்ட வரைமுறைகள் உள்ளது. மருத்துவ கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கான பாதுகாப்பான சட்ட ரீதியாக கருக்கலைப்பினை உறுதி செய்கிறது. திருத்தப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் படி, மருத்துவ கருக்கலைப்பினை 24 வாரங்கள் வரை மேற்கொள்ளவும், 24 வாரங்களுக்கு மேலுள்ள அசாதாரண கருவை மருத்துவ குழுவின் ஒப்புதல் மூலம் கருக்கலைக்க வழிவகை செய்கிறது,’’ என்பது சட்டநிபுணர்கள் கூறும் தகவல்

Related Stories: