வறுமையால் அதிகரிக்கும் இடப்பெயர்வு; துயரங்களோடு சாலையோரம் வசிக்கும் மக்கள் 7.8 லட்சம் பேர்: மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வாழ்விடங்கள்

 

‘‘ஏழைகளின் மனித உரிமைகளை பொருளாதாரமும், அரசியலும் புறக்கணிப்பதால் பணக்கார நாடுகள் மட்டுமன்றி வளரும் நாடுகளிலும் வீடற்ற தன்மை பரந்த அளவில் நீடிக்கிறது,’’ என்பது மனிதநேய சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தும் வேதனை. இதன்படி வளரும் நாடுகள் மட்டுமன்றி, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் வீடின்றி தவிக்கின்றனர் என்பது நிரூபணமாகிறது. இந்தியாவை பொறுத்தவரை 7.8 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக சாலையோரங்களில் வசிக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் நடைபாதைகள், சாலையோரங்கள், ரயில் நடைமேடைகள், படிக்கட்டுகள், கோயில்கள், தெருக்களின் திறந்தவெளிகள், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்கள், பாலங்களை ஒட்டிய பகுதிகளில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வசித்து வருகின்றனர்.

வீடற்றவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் தான் வசிக்கின்றனர். வீடற்ற நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது வறுமை. கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கும் நகரமயமாக்கலே இதற்கு காரணம். தங்களுக்கான வாய்ப்புகளை தேடி கிராமத்தில் இருந்து ெபரும்பாலான மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தான், வீடற்றவர்களாக நகரங்களில் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை வீடற்ற மக்கள் தொகை என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களை வாட்டும் வறுமை என்பது தொடர்ந்து வீடற்ற நிலைக்கு ஆளாக்குகிறது என்றும் ஆய்வுகள் ெதரிவித்துள்ளன.

இதுகுறித்து சமூகமேம்பாடு சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் 2சதவீதம் பேர், வீடற்றவர்களாக உள்ளனர். தொற்றுநோய்கள், பல பிரச்னைகள், நாள்பட்ட வலி போன்ற பாதிப்புகளால் இது போன்ற மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். வருமானம் மற்றும் சேமிப்பு இல்லாமை, பசி மற்றும் கவனிக்கப்படாத மருத்துவ சேவைகளுக்கு வீடற்றவர்களே அதிகளவில் ஆட்படுகின்றனர். சுகாதாரமான கழிப்பறை வசதி, தூய்மையான குடிநீர் வசதி போன்றவையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. குளிர், மழை, பட்டினி போன்றவற்றின் நீண்டகால வெளிப்பாட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையும் அறவே கிடைப்பதில்லை.

இந்தவகையில் சில லட்சம் மக்களின் வாழ்க்கை சீரழிவு என்பது நாட்டில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையின் உச்சமாகும். வீடற்றநிலை என்பதை முற்றிலும் ஒழிக்க முடியாது. இருப்பினும் அதை குறைக்க முடியும். மலிவுவிலை வீடுகள் இல்லாமை, வேலையின்மை, குறைந்த ஊதியம், வறுமை என்ற நான்கும் இதற்கான முக்கிய காரணங்கள். போதைக்கு அடிமையாகி போராடும் நபர்கள், மனநலம் குன்றியவர்கள், தேவையான பராமரிப்பு மற்றும் அதற்கான சேவை வாய்ப்பு இல்லாதவர்களே வீடற்றவர்களாக உள்ளனர். பெண்களை பொறுத்தவரை குடும்ப வன்முறை என்பது அவர்களை வீடற்றவர்களாக மாற்றுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதற்கு தீர்வு காணும் வகையில் அரசுகள் ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். அதை எந்தவித தொய்வும் இல்லாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தொடரும் இந்த அவலமானது, வருங்காலங்களில் கட்டுக்குள் வரும் வாய்ப்புள்ளது.

வீடற்றவர்கள் போதுமான உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கான குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இயற்கை பேரிடர்களின் போது, மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதும் இவர்கள் தான். சரியான தங்குமிடம் இல்லாமல் இருப்பதால் மாண்புடன் வாழும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாட்டில் வீடற்றவர்களாக வசிக்கும் ஒவ்வொரு மனதின் துன்பத்தையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் வீட்டு வசதி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியதும் காலத்தின் அவசியம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

எதிர்கொள்ளும் தவறான பார்வை
சாலையோரம் வசிக்கும் மக்களை பொறுத்தவரை ஆக்கிரமிப்பாக மட்டுமே கருதி அதிகாரிகள் அணுகுகின்றனர். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? குடும்பசூழல் என்ன? எதற்காக சொந்த ஊரைவிட்டு இங்கு வந்து வசிக்கிறார்கள்? என்ற கேள்வியையும் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அதை உயரதிகாரிகளின் கவனத்திற்கோ, அரசின் கவனத்திற்ேகா கொண்டு சேர்ப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக அந்தப்பகுதியில் ஏதாவது சமூகவிரோத செயல்கள் நடந்தால், இதுபோன்ற மக்களை அழைத்துச் சென்று விசாரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனஅழுத்தம் உருவாகிறது
வீடு என்பது ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை தரும் ஒரு புத்தாக்க மையம் என்றே கூற வேண்டும். இரவு நன்றாக உறங்கி, காலையில் தனது இலக்கை ேநாக்கி பயணிப்பதற்கான புத்துணர்வு இங்கிருந்து தான் கிடைக்கிறது. வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனை ஏற்றுக் ெகாண்டு முயற்சிகளை தொடர்வதற்கான ஊக்கம் என்பது ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறும் ேபாது கிடைக்கிறது. அதேநேரத்தில் வீடற்றவர்களாக இருப்போரில் 20முதல் 25சதவீதம் பேர், கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடற்ற நிலையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத இடங்களில் உறங்கி எழுபவர்களின் மனதில் தொடர்ந்து ஒரு வித குழப்பம் நீடிக்கும். இந்த குழப்பம் தான் அவர்களின் மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

திறமைகளை முடக்குகிறது
வீடற்ற நிலையில் வசிக்கும் பலரிடம் நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் வசிக்கும் சூழல் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாத நிலையை உருவாக்கும். வேலைவாய்ப்பு, மருத்துவம், அரசின் சலுகைகள் என்று எதையும் பெறுவதற்கான ஆதாரச்சான்றுகளும் சிலருக்கு கிடைக்காமல் உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக பெருநகரங்களில் குடிபோதையில் நிகழும் கார்விபத்துகள் மற்றும் திடீர் விபத்துகளில் சிக்கி இறப்போரும் வீடற்ற மக்களாக உள்ளனர். ஆண்டு தோறும் இது போன்ற விபத்துக்கு கணிசமான உயிர்கள் பலியாகிறது. எனவே இதுபோன்ற மக்கள் குறித்த தெளிவான கணக்கெடுப்பை அரசுகள் நடத்த வேண்டும். வீடற்றவர்களின் நிலை என்ன? அவர்களின் தேவை என்ன? அதற்கு முழுமையான தீர்வு காண்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு தனி இயக்கமாக மாற்ற வேண்டும் என்பது தன்னார்வ அமைப்புகளின் எதிர்பார்ப்பு.

Related Stories: