மனஅழுத்தம், பருமனுக்கு வழிவகுக்கிறது; இரவில் கண்விழித்து செல்போனில் மூழ்குவது உடல்நலத்திற்கு ‘டேஞ்சர்’: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

 

ஆன்ட்ராய்டு செல்போன் என்பது தற்போது மனித வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு அத்தியாவசிய உபகரணம்’’ என்றால் அது மிகையல்ல. நமது பணிகள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்கான ஒரு அரிய கண்டுபிடிப்பு என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல்லுக்கும் இலக்கணமாகி நிற்கிறது இந்த செல்போன். உலகளாவிய மக்கள் தொகையை விட அவர்கள் பயன்படுத்தும் செல்போன்களின் எண்ணிக்ைக அதிகமாக உள்ளது. அதிலும் இந்தியாவை பொறுத்தவரை 95 சதவீதம் மக்கள் செல்போன் மீது நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். குறிப்பாக 50 சதவீதம் இளைஞர்களும், யுவதிகளும் செல்போன்களே தங்கள் உலகம் என்று வாழ்கின்றனர்.

மிக முக்கியமாக இவர்கள் காலம் நே ரம் தெரியாமல் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் கண்கள் சோர்ந்து தாமே உறங்கும் வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கம் என்பது ‘‘ரிவென்ஜ் பெட் டைம் புரோகிராஸ் டினேஷன்’ என்ற பாதிப்பாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதுகுறித்து உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளிடம் கூட தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. சமூக வலைதளங்கள் தான், அவர்களது அன்றாட பொழுதுபோக்கு என்ற நிலையே நீடிக்கிறது.

இந்த வகையில் நள்ளிரவு வரை செல்போனில் மூழ்கி கிடப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் அபத்தமானது. அதாவது தூக்கம் தானாக வந்து கண்களை மூட வைக்கும் வரை, செல்போன் பார்த்துக் கொண்டே இருப்பவர்களும் கணிசமாக உள்ளனர். அதாவது நமது வசதிக்காக தூக்கத்தை தள்ளிப்போடுவது என்பது அபாயங்களை விளைவிக்கும். அதிலும் செல்போனை பார்த்துக் கொண்டே கண்ணை மூடுவது என்பது பெரும் அபத்தத்திற்கு அடித்தளம் அமைக்கும். நமது வாழ்க்கை முறை எவ்வளவு மாறியிருந்தாலும், நமது உடல் இரவில் தூங்குவதற்கு தான் பழக்கப்பட்டுள்ளது. அதை வலுக்கட்டாயமாக மாற்றினால், உடலின் சுரப்பிகளில் சமநிலையின்மை உருவாகலாம். அதிக நேரம் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருந்தால், மூளையின் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று உலக அளவில் பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்கிரீனிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தை கண்கள் பார்க்கும் போது, இன்னும் இரவு நேரம் வரவில்லை என்று மூளை கருதும். எனவே உடல் ஓய்வு எடுக்க தயாராகாது. இரவு தூங்குவதற்கு முன்பு, சமூக வலைதளங்களில் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் இது கூடுதல் மனஅழுத்தத்தை மட்டுமே தரும். இரவில் நீண்டநேரம் கண்விழித்திருப்பதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தூக்கமின்மை என்பதே அவர்களுக்கு பெரும் பிரச்னையாகி விடும். இந்த தூக்கமின்மை என்பது இதயபாதிப்புகள், உடல்பருமன் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மனஅழுத்தம், பதற்றம் போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாக காரணமாகி விடும்.

குறிப்பாக பதின்ம பருவத்தின ரிடம் இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, கூடுதலாக ஸ்கிரீன் பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஆண் பிள்ளைகளிடம் மூர்க்கத்தனமும், பெண் பிள்ளைகளிடம் பதற்றம் மற்றும் மனசோர்வும் 10% அதிகரிக்கிறது. மேலும் தற்கொலை எண்ணம் தோன்றுவதும் அதிகரிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆய்வு ஒன்றும் தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற அபாயங்களை உணர்ந்து செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

தூக்கத்தை விட ஓய்வே பிரதானம்
‘‘தொலைக்காட்சி அல்லது வெப் தொடர்களின் பல பாகங்களை தொடர்ந்து ஒரே நேரத்தில் பார்ப்பது, சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருப்பது, தனிப்பட்ட பணிகளை முடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட, இரவு தூங்காமல் விழித்திருக்க முடிவு செய்யலாம். இதில் ஈடுபடும் பலர் இரவில் வெகுநேரம் விழித்திருப்பது சோர்வை உண்டாக்கும். இதனால் காலையில் எழுந்திருப்பது சிரமமாகும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் தூக்கத்தை விட ஓய்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்படி செய்வது ஒருவரின் நேரத்தின் மீதான கட்டுப்பாட்டு உணர்வை வழங்கக் கூடும். குறிப்பாக மிக நெருக்கடியான வேலை சூழலை கொண்டவர்கள், தூக்கத்தை இழந்தாலும், இரவில் தாமதமாக விழித்திருப்பதால் தனக்கான நேரத்தின் மீதான அதிகாரம் கிடைத்திருப்பதாக உணர்கின்றனர்,’’ என்பதும் உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

தொடர்பு தடைபடும் என்ற அச்சமே காரணம்
கவனக் குறைபாடு இருப்பவர்களும், தூக்கமின்மையால் தவிப்பவர்களும் இரவு நீண்டநெடிய நேரம் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அவர்களிடம் யாராவது இதுகுறித்து கேட்டால், ‘‘எனது தூக்கத்தை தள்ளி போடுவதற்கும், குறைப்பதற்கும் எனக்கு சுதந்திரம் உண்டு’’ என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது. தற்போதுள்ள தலைமுறையினரின் நட்பு வட்டம் என்பது பெரும்பாலும் ஆன்ட்ராய்டு மொபைல் ேபானில் தான் தொடர்கிறது. இதற்காக பல்வேறு தளங்களில் அவர்கள் இயங்கி வருகிறார்கள். தங்களது தொடர்பில் இருப்பவர்களுடன் நட்பை நீட்டிக்கவும் அவர்கள் காலநேரம் பார்க்காமல் உரையாடி வருகின்றனர். இல்லாவிட்டால் நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமும் இதற்கு ஒரு காரணம்,’’ என்றும் ஆய்வுகளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.டி. ஊழியர்கள் அதிகமாக உள்ளனர்
தொழில்நுட்பம் வேகமாக மாறிக் கொண்டே இருக்கும் காலத்தில் தொழில் சந்தையில் ஒருவர் தன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து கற்றுக் கொண்டு, புதிய திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று உலக பொருளாதார அமைப்பு கூறுகிறது. குறிப்பாக ஐ.டி. துறையில் பணிபுரிவோர் தொடர்ந்து புதிதாக விஷயங்களை கற்றுக் கொண்டு தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் அவர்களது மனதில் வேலை சார்ந்த எண்ணங்கள், கேள்விகள் ஓடிக்கொண்டே இருக்கும். படுக்கைக்கு சென்றாலும் மனம் வேலை சார்ந்த எண்ணங்களையே கொண்டிருக்கும். எனவே ரீல்ஸ் பார்ப்பது, வெப் சீரீஸ் பார்ப்பது போன்றவற்றால் மனதை திசை திருப்புகின்றனர். இந்தவகையில் தொழில் துறையை பொறுத்தவரையில் ஐ.டி. ஊழியர்கள் அதிகளவில் இரவு நேரம் கடந்தும் செல்போனில் மூழ்கிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் செய்ய வேண்டும்
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது, அதிக நேரம் ஸ்கிரீன் (அலைபேசி, டி.வி.) பார்ப்பதை தவிர்ப்பது, ‘மீ டைம்’ என்று கூறுவதை செல்போன் பார்க்கும் நேரமாக இல்லாமல் தூங்குவதற்கான நேரமாக மாற்றிக்கொள்வது, செல்போன் பார்ப்பது அல்லாமல், இளைப்பாற வேறு சில விசயங்களை செய்வது, இரவு 9 மணிக்கு பிறகு செல்போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது, சில செயலிகளில் நேரம் செலவிடுவதை கண்காணித்து கட்டுப்படுத்துவது, ‘ஸ்கிரீன் டைம்’ என்பதற்கு பதிலாக எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருக்கும் ‘ஏர் டைம்’ முறையை கடைபிடிப்பது போன்றவை ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் அறிவுரை.

Related Stories: