மதுரை: குற்ற வழக்கு நிலுவையில் இருப்போர், பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெறுவது கட்டாயம் என, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த ஜவகர்ராஜன் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சார்பில், ஒத்திவைக்கப்பட்டு இருந்த உத்தரவு நேற்று பிறக்கப்பட்டது.
இதன் விபரம் வருமாறு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். காவல்துறை அறிக்கையில், அவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டதால், அதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது குற்றப்புகார் பொய்யானது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்த அவரது பதில், பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்கப்படவில்லை. எனவே அந்த நோட்டீசை ரத்து செய்து, பாஸ்போர்ட்டை மீண்டும் புதுப்பிக்கக் கோரி இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
பாஸ்போர்ட் சட்டத்தின் படி, குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், பாஸ்போர்ட் வழங்கவும், புதுப்பிக்கவும் மறுக்கலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதி இருந்தால், அதனை வழங்க வழியுள்ளது. எனவே குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள், பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம். கொடூரமான குற்றச்செயல் புரிந்தவர்கள் தப்பிச்செல்வதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மனுதாரருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கிருந்து அனுமதி பெறாமல் பாஸ்போர்ட் புதுப்பிக்குமாறு கோர இயலாது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட் வழங்குவது போலவே, பழையதை புதுப்பித்தலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டது. இவ்வாறு குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
