ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.20 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வைத்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று பெரியபெருமாள் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி என கோவில் வளாகத்தில் உள்ள 17 உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
முன்னதாக கோயிலில் இருக்கும் அனைத்து உண்டியல்களும் உட்பிரகார மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில் ஊழியர்களும், பக்தர்களும் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், பணமாக 20 லட்சத்து 16 ஆயிரத்து 929, தங்கம் 25 கிராம் 600 மில்லி, வெள்ளி 126 கிராம் 100 மில்லி ஆகியவை இருந்தன. உண்டியல்கள் எண்ணும் பணிக்கு கோயில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், உதவி ஆணையர் லோகநாதன், ஆய்வாளர் முத்து, மணிகண்டன், கண்காணிப்பாளர் அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
