நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: இதுவரை 406 பேர் இடம்பிடிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை நேரடியாக சென்றடையும் வகையில் பெரிய கூட்டங்கள், ரோடு ஷோக்கள், சமூக ஊடக பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை முன்னிறுத்தும் முயற்சியில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நட்சத்திர பேச்சாளர்களின் பெயர் பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிகபட்சம் 40 பேரையும், அங்கீகாரம் பெறாத கட்சிகள் 20 பேரையும் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கலாம். இந்த பட்டியலில் இடம் பெறும் பேச்சாளர்கள் மேற்கொள்ளும் பிரசார செலவுகள், அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த பேச்சாளர்களின் பயணம் மற்றும் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான சில செலவுகள் கட்சியின் கணக்கில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

அதன்படி, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தவெக சார்பில் நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 20 பேர் பெயர்கள் கொண்ட பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியல்படி, இதுவரை பல்வேறு கட்சிகளிலிருந்து மொத்தம் 406 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில கட்சிகள் தங்களது பட்டியலை சமர்ப்பிக்கும் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: