லக்னோ: உத்தரபிரதேச சட்டசபையில் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது செல்போன் ஒலித்ததால் அவைத்தலைவர் கடும் கோபமடைந்தார். உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கடந்த காலங்களில் அவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மறைந்த உறுப்பினர்களான ஷியாம் பிஹாரி லால் மற்றும் விஜய் சிங் கவுர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சபையில் நடந்தது. அப்போது ஒட்டுமொத்த அவையும் அமைதியாக இருந்த போது, திடீரென 2 உறுப்பினர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து சத்தமாக ஒலிக்கத் தொடங்கின. இதில் ஒரு செல்போன் பதேபூர் சிக்ரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சவுத்ரி பாபுலாலுக்கு சொந்தமானது.
அஞ்சலி செலுத்தும் போது அவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்த இந்த செயலால் ஆத்திரமடைந்த அவைத்தலைவர் சதீஷ் மகானா, உடனடியாக அவை பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மேலவையிலும் இட ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக பெரும் மோதல் நிலவியது. அரசு பணிகளுக்கான ஆள்சேர்ப்பில் குளறுபடிகள் நடப்பதாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டிய போது, அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இரட்டை வேடம் போடுவது போல் உள்ளன’ என சாடினார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
