அரசு நிகழ்ச்சிகள் , பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு!

டெல்லி: அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 பத்திகளையும் (3.10 நிமிடங்கள்) முழுமையாக பாட வேண்டும் என்றும், தேசியக் கொடி ஏற்றும்போதும், ஆளுநர் உரை மற்றும் ஜனாதிபதி உரை ஆகிய சமயங்களிலும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மண’ இசைக்கப்படுவதற்கு முன்பாகவே ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 150-வது ஆண்டு விழாவைக் காணும் இப்பாடலின் ஆறு சரணங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பதிப்பானது, 3 நிமிடம் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும் என கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடல் இசைக்கப்படும் போது அங்கிருக்கும் அனைவரும் நேராக நின்று கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும் என்ற நெறிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் வருகை, தேசியக் கொடி ஏற்றுதல், பதவியேற்பு விழாக்கள் மற்றும் அகில இந்திய வானொலி உரைகள் போன்ற முக்கியத் தருணங்களுக்குப் பொருந்தும். குறிப்பாக, பள்ளிகளில் அன்றாட வகுப்புகள் தொடங்கும் போது இப்பாடலைத் கூட்டுப் பாடலாகப் பாடுவதன் மூலம் மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: