திருவனந்தபுரம்: ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்தை எதிர்த்து நாளை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 24 மணிநேர பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதை முன்னிட்டு கேரளாவில் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், பஸ்கள் உள்பட வாகனங்கள் எதுவும் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு. தொழிலாளர் வரைமுறை சட்டத்தை அமல்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை (12ம் தேதி) 24 மணிநேர தேசிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில ஒருங்கிணைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12ம் தேதி (நாளை) தேசிய அளவில் 24 மணிநேர பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இதில் கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும். அரசு, தனியார் பஸ்கள், கார், ஆட்டோ, லாரிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடாது. மால்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, துறைமுகம், ராணுவம், விமான போக்குவரத்து நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பஸ்கள் இயங்காது.
