வடக்குத்து பகுதியில் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

நெய்வேலி, பிப். 10: வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி மேல் வடக்குத்து சடாமுனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் வீரமணி(26). இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப், தெர்மல் காவல் நிலையம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம், வேப்பூர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்கு, சண்டை வழக்கு என 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ் வடக்குத்து ஜங்ஷன் அருகே வீரமணி கையில் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இது குறித்து அறிந்து வந்த நெய்வேலி நகர சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், வழக்கு பதிவு செய்து வீரமணியை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: