சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநில பாஜவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் “பாயிண்ட் பிளாங்க் ஷாட்’’ என்ற வாசகத்துடன் முஸ்லிம்களை சுட்டுத்தள்ளுவதை போன்ற வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. . இந்த பதிவுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அசாம் பாஜ அந்த வீடியோவை பின்னர் நீக்கியுள்ளது.
இதை முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இதற்கு முன்பாகவும் “முஸ்லிம் ஓட்டுநர்கள் 5 ரூபாய் கூலி கேட்டால், 4 ரூபாய் மட்டுமே தர வேண்டும்” என்ற விஷமத்தனமான, சமூக பாகுபாட்டை ஊக்குவிக்கும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தையும் அரசியல் நெறிமுறைகளையும் காக்க வேண்டிய முதல்வரே, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக வெறுப்பை விதைத்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, இந்திய உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைதியை பாதுகாத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது
