*திருமங்கலத்தில் திடீர் பரபரப்பு
திருமங்கலம் : குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, திருமங்கலத்தில் ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையிலிருந்து கேரளா மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தது. பின்னர் அடுத்த நிறுத்தமான விருதுநகர் நோக்கி, 6.50க்கு ரயில் புறப்பட்டது. மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே வழக்கம்போல் வேகமாக சென்ற ரயிலின் முன்பகுதியில் இருந்து அதிகளவு தூசியுடன் புகை வந்தது.
இதனை பார்த்த முன்பதிவில்லா பெட்டியில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். அப்பகுதியில் தீப்பிடித்து அதனால் புகை வருவதாக நினைத்து அச்சமடைந்த அவர்கள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதனால் ரயில் திருமங்கலத்தில் நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கினர். அபாய சங்கிலி இழுக்கப்பட்டதை ரயிலில் இருந்த லோகோ பைலட் வாயிலாக அறிந்த, திருமங்கலம் ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அவர்களின் சோதனையில் ரயிலில் எந்த இடத்திலும் தீப்பற்றவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து ரயில் திருமங்கலத்திலிருந்து 20 நிமிடம் தாமதமாக பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது.
இதுகுறித்து விசாரித்த ரயில்வே போலீசார், ‘‘மதுரை – திருமங்கலம் இடையே தண்டவாளத்தின் ஓரத்தில் புதிய ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ரயில் படுவேகமாக சென்றதால் அதிலிருந்து எழுந்த தூசியை பயணிகள் புகை என நினைத்து அச்சமடைந்து அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்’’ என்றனர்.
திருமங்கலம் ஸ்டேசனில் ரயில் நிறுத்தப்பட்டதால் அருகில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. மீண்டும் அதனை திறக்க 40 நிமிடங்கள் வரை ஆனதால் காமராஜபுரம், கற்பகநகர், சோனைமீனாநகர், சுங்குராம்பட்டி, விடத்தகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த வாகனோட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
