தாராபுரம் அருகே குடிநீரில் விஷம் கலந்ததால் 17 ஆடுகள் உயிரிழப்பு

தாராபுரம் : தாராபுரம் அருகே குடிநீரில் விஷம் கலந்ததால் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. விஷம் கலந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம் எரசனம்பாளையம் ஊராட்சி மூலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கசாமி (50). இவரது மனைவி பழனாத்தாள்(45).

தம்பதியர் விவசாய தோட்டத்தில் பட்டிகளை அமைத்து 25 ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல தங்கள் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, சிறிது தொலைவில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டில் சென்று தூங்கினர்.

நேற்று காலை ஆடுகளை பட்டியிலிருந்து மேய்ச்சலுக்காக திறந்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து மேய்ச்சல் நிலத்துக்கு சென்று பார்த்த போது, ஆங்காங்கே மொத்தம் 17 ஆடுகள் இறந்து கிடந்தன. இதை கண்டு பழனாத்தாள் அதிர்ச்சி அடைந்தார்.

பட்டி அருகே ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்ட 2 தொட்டிகளுக்கு சென்று பார்த்த போது அதில் ஒரு தொட்டியில் கருப்பு நிறத்தில் விஷம் கலந்த நெடியுடன் தண்ணீர் இருந்தது.

மற்றொரு தொட்டி தண்ணீர் நிறம் மாற வில்லை. இதையடுத்து தண்ணீரில் யாரோ விஷத்தை கலந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து மூலனூர் போலீசாருக்கும் கால்நடை மருத்துவத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த கால்நடைத்துறையினர் இறந்து போன ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் ஆழமாக குழிகளைத் தோண்டி புதைக்குமாறு அறிவுறுத்தினர். விஷம் கலக்காத மற்றொரு தொட்டியில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் உயிர் தப்பியது தெரியவந்தது. தொட்டியில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக கால்நடைதுறையினர் எடுத்து சென்றனர்.

முன் விரோதம் காரணமாக ஆடுகள் குடிக்கும் தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும். ஆடுகளை இழந்த பழனாத்தாள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories: