மாநகராட்சியின் ‘யாசகர் இல்லா மதுரை’ திட்டம்

* 2 ஆண்டுகளில் 40 சதவீதம் குறைப்பு

* ஆய்வு செய்த ஆந்திர அதிகாரிகள் வியப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் ‘யாசகர் இல்லா மதுரை’ திட்டத்தினை, ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாநகராட்சியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், நகரில் கடந்த 2 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை யாசகம் பெறுவோர் குறைந்திருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

மதுரை மாநகராட்சியில், ‘ஸ்மைல்’ என்ற யாசகர் இல்லா மறுவாழ்வு திட்டம் 2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென 4 மறுவாழ்வு இல்லங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 100 சதவீதம் யாசகர் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளில் நகரில் 40 சதவீதம் வரை யாசகர்களை குறைத்திருப்பதை கடந்த நவம்பரில் ஆய்வு நடத்தி ஒன்றிய அரசு குழு மதிப்பீட்டில் முதலிடம் வழங்கியுள்ளது.

யாசகர்களை மீட்டு மறுவாழ்வு வழங்குதல், குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் என்பதுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டோருக்கு தொடர் ஆலோசனை, சத்தான உணவு, மருத்துவ பராமரிப்பு, சுகாதாரம் மிகுந்த தங்குமிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் தொடர்ந்து பல்வேறு மாநில அதிகாரிகளும், தங்கள் மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மதுரை வந்து ஆய்வு செய்து, விபரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

இதன்படி ஆந்திராவின் காக்கிநாடா மாநகராட்சி செயலாளர் லெட்சுமி தலைமையில், நகர் திட்டமிடல் அதிகாரி சைலஜா, கண்காணிப்பாளர் சதீஷ்பாபு, நகர மிஷன் மேலாளர் வெங்கட் ராஜூ உள்ளிட்ட 8 பேர் மதுரை வந்தனர். இவர்கள் இரு நாட்கள் மதுரையில் தங்கியிருந்து, மாநகராட்சி செயல்படுத்தி வரும் ஸ்மைல் மறுவாழ்வு இல்லங்களை ஆய்வு செய்தனர்.

மாநகரில் பஸ் ஸ்டாண்ட்கள், ரயில் நிலையம், மீனாட்சி கோயில் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், மறுவாழ்வு பெற்று வருமானம் ஈட்டி வரும் பயனாளிகளைச் சந்தித்தும் உரையாடினர்.

கருத்துகளை, அனுபவங்களை பதிவு செய்தனர். மாநகராட்சியுடன், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், ரோஜாவனம் அமைப்பினர் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் முழு விபரங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து ரோஜாவனம் அமைப்பின் இயக்குநர் அருள்கண்ணன் கூறும்போது, ‘மதுரை மாநகராட்சியின் இத்திட்டத்தால் 2 ஆண்டுகளில் யாசகர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் 3 ஆண்டுகளில் 100 சதவீதம் எட்டப்பட்டு, யாசகர்கள் இல்லாத மதுரை உருவாக்கப்படும். கேரளா, தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாநகராட்சி குழுவினர் வந்து 2 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளனர்.

இத்திட்டத்தை அங்கு நிறைவேற்ற எங்களையும் அழைத்துள்ளனர். இந்தியாவிலேயே மதுரை மாநகராட்சியில் தான் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுகிறது என, ஒன்றிய அரசே சான்று அளித்துள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை 500க்கும் அதிக யாசகர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரை போலீசார் உதவியுடன் முகவரி கண்டறிந்து குடும்பத்தில் சேர்த்துள்ளோம். மபியின் இந்தூர் யாசகர்கள் இல்லாத முதல் நகராக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மதுரை இப்பட்டியிலில் இடம்பெறும் வகையில் மாநகராட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளது’ என்றார்.

ஸ்மைல் திட்ட தலைமை செயல் அதிகாரி எட்வின் ஆண்டனி, மாநில ஒருங்கிணைப்பார் ரஞ்சித் பெர்னாட்ஷா, ஸ்மைல் இல்ல மேலாளர்கள் ராமர், கிரேஸியஸ், முருகப்பன், சரவணன், பெஞ்சமின், ஆலோசகர்கள் அன்னலெட்சுமி, அனிதா, காஞ்சனா, தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: