தூய்மைப் பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பக் காப்புப் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியத்தில் தற்போது 3,27,232 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், “தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, 09.12.2022 அன்று இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக தூய்மைப் பணியாளர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், சுகாதாரக் காப்பீடு, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தொடர் உடல்நல பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியன தடையின்றி பெறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு திறன் மேம்படுத்துதல், மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றினை தொடர்ந்து கண்காணிக்க 50 கோடி ரூபாய் அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட 14.08.2025 அன்று தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டம், பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகை ஆகிய 6 புதிய சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது அத்திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது;
நகரங்களையும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பேணிக் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பணியாற்றும் சூழலில் பசியற்று இருக்கவும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என சுழற்சி முறையில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை 15.11.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில், உணவு வேளையில் சுவையும் – ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. தூய்மையான முறையில் சமைத்து, உணவுக் கலனில் வைத்து, சூடு குறையாமல் இருப்பதற்கு வெப்பக் காப்புப் பையில் (Insulated Thermal Carrying Bag) எடுத்துச் செல்லப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகாமையிலேயே உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவு பரிமாறப்படுகிறது. இதன் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் விரிவாக்கம்;
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் 15.11.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் (9.02.2026) விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றிற்கு 213 கோடியே 92 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். முன்னதாக, தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன், டி.ஜெ. கோவிந்தராஜன், சுதர்சனம், கிருஷ்ணசாமி, கணபதி, துரை சந்திரசேகர், உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் எம். பிரதீப் குமார், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: