வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வெளியீடு; ரூ.45 லட்சம் கோடி அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: விவசாய பொருட்களுக்கும் ஒன்றிய அரசு தாராள அனுமதி

* மார்ச் மாதம் முறைப்படி கையெழுத்திட சம்மதம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையின்படி அமெரிக்காவில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் விதிக்கப்பட்ட 25% வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்றபோது அனைத்து நாடுகளுக்கும் விதித்த வரிக்கு வரி அடிப்படையில் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 சதவீதம்வரி என மொத்த வரி சுமார் 50 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் பேசிய டிரம்ப் திடீரென இந்தியா மீதான வரிக்கு வரியான 25 சதவீதத்தை 18 சதவீதமாக குறைத்தார்.

மேலும் அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யை இந்தியா அடியோடு நிறுத்தி விட்டதால் அதற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் ரத்து செய்யப்போவதாகவும், மேலும் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டு, மொத்த வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

நேற்று முதல் இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை இருநாடுகள் சார்பிலும் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ரூ.27 லட்சம் கோடி பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா சம்மதித்து உள்ளதாக டெல்லியில் பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆனால், இது பற்றி இருநாட்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தால் மருந்துப் பொருட்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்குப் பூஜ்ஜியம் சதவீத வரி விதிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கு 18 சதவீத வரி மட்டுமே இனிமேல் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பால், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற உணர்திறன் மிக்க விவசாயத் தயாரிப்புகளுக்கு இந்தியா தனது வரிப் பாதுகாப்பைத் தொடர்ந்து நீட்டித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் அதிநவீன கம்ப்யூட்டர் பாகங்கள் மற்றும் தரவு மைய உபகரணங்களை வாங்கவும், விமானப் போக்குவரத்துத் துறையில் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான விமானங்கள் மற்றும் இன்ஜின்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த இடைக்கால கூட்டறிக்கை அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் உடனே அமலுக்கு வந்தாலும், சட்டப்பூர்வ ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாக உள்ளது. அதன்பிறகு முறைப்படி இந்தியா பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா குறைக்கத்தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 70 கோடி வேலை வாய்ப்பு பறிபோகுமா?
இந்தியா விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கிராமப்புற பொருளாதாரத்தை நம்பி உள்ளது. இது 70 கோடிக்கும் அதிகமான வேலைகளை வழங்குகிறது. எனவே ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒப்பந்தங்களில் விவசாய பொருட்கள், பால் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும் இந்தியா வரிச்சலுகை வழங்கவில்லை. ஆனால் அமெரிக்க விவசாய பொருட்களுக்கு வரிகளை ரத்து செய்துள்ளதால் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியியுள்ளனர்.

* பிப்.12ல் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு விவசாய சங்கங்களான எஸ்கேஎம், ஏஐகேஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் பிப்.12ல் கிராமங்களில் போராட்டங்கள் நடத்தப்படும். டிரம்ப் மற்றும் மோடியின் உருவ பொம்மை எாிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

* 2021-25 ஆம் ஆண்டில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது.
* இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா சுமார் 18 சதவீதத்தையும், இறக்குமதியில் 6.22 சதவீதத்தையும், இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
* 2024-25 ஆம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் ரூ.17 லட்சம் கோடியை தொட்டது.

* டிரம்புக்கு நன்றி தெரிவித்த மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இந்த அறிவிப்பு சிறந்த செய்தியாகும். இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இது ஒரு நல்ல செய்தி.

நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இது இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறுகுறு தொழில் முனைவோர், ஸ்டார்ட்அப் கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* அமெரிக்காவுக்கே அதிக சாதகம்: ப.சிதம்பரம்
இந்திய – அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது ஓர் இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல.

இது ஓர் இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு மட்டுமே. இந்த கூட்டறிக்கையில் உள்ள இரண்டாம் பத்தியும், பல்வேறு துணைப் பிரிவுகளும் இந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்குகின்றன. 2.4.2025, 5.9.2025, 8.3.2018, 30.7.2025, 17.5.2019 ஆகிய தேதிகளில் அமெரிக்கா பிறப்பித்த உத்தரவுகளைப் படித்து ஆய்வு செய்யாதவரை, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளின் சரியான தன்மையை புரிந்து கொள்வது சாத்தியமற்றது.

ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சமச்சீரற்ற தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு எப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய விஷயமாக இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* அமெரிக்க ஆப்பிளுக்கு வாிச்சலுகை
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிலிருந்து வரும் ஆப்பிள்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவிற்கு ரூ.80 மற்றும் இறக்குமதி வரி 25 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கிலோவிற்கு ரூ.100க்கும் குறைவான விலையுள்ள ஆப்பிள்களை அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது.

தற்போது, இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு கிலோவிற்கு ரூ.50 மற்றும் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது கிலோவிற்கு ரூ.75க்கும் குறைவான விலையுள்ள ஆப்பிள்களின் இறக்குமதியைத் தடுக்கிறது. அதனால் இந்திய ஆப்பிள் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் டன் ஆப்பிள்களை இறக்குமதி செய்கிறது.

* அமெரிக்க விவசாய பொருட்கள் இனி இந்தியாவில் விற்கலாம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரேர் கூறுகையில்,’ அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றைத் திறக்கிறது. இந்த அறிவிப்பு, இரு நாடுகளிலும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளை நிரூபிக்கிறது.

பரந்த அளவிலான விவசாய பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது அல்லது வரியை நீக்குவதால் இனி எந்தவித தடையும் இல்லாமல் அமெரிக்க விவசாய பொருட்களை இந்தியாவில் விற்க மிகப்பெரிய சந்தை கிடைத்துள்ளது’ என்றார்.

* 800-1,600 சிசி அமெரிக்க பைக்குகளுக்கு வரி இல்லை
புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 800-1,600 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட பைக்குகளுக்கு அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு வரி இல்லாத அணுகலை இந்தியா வழங்கும். இது அமெரிக்க பிராண்டான ஹார்லி-டேவிட்சனுக்கு பயனளிக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு, 1,600 சிசி வரை எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்தது.

* அமெரிக்கா சொல்வது என்ன?
* அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான அமெரிக்க உணவு மற்றும் விவசாய பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்
* உலர்ந்த தானியங்கள், கால்நடைகள், செல்லப்பிராணிகள் தீவனத்திற்கான சிவப்பு சோளம், பாதம், முந்திரி, வால்நட், பிஸ்தா, புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் கூடுதல் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும்.
* முக்கிய தானியங்கள், பழங்கள், பால் பொருட்கள், இறைச்சி ஆகியவற்றிற்கு வரிச் சலுகைகள் இல்லை.
* அமெரிக்க மருத்துவ சாதனங்களின் வர்த்தகத்தில் நீண்டகாலமாக நிலவும் தடைகளை நிவர்த்தி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டது.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ரூ.45 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* எந்தவொரு நாட்டினதும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அமெரிக்காவும் இந்தியாவும் மற்ற நாடு தனது உறுதிமொழிகளை மாற்றியமைக்க ஒப்புக்கொள்கின்றன.
* அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்காவுடன் ஒரு கட்டமைப்பிற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
* இந்த உத்தரவை அமல்படுத்துவதற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஏற்றுக்கொள்வது உட்பட, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு இந்த உத்தரவு அதிகாரம் அளித்துள்ளது.
* வெளியுறவு அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய கூட்டமைப்பு எண்ணெயை இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்குகிறதா என்பதைக் கண்காணிப்பார்கள்.

* இது ஒப்பந்தம் அல்ல, சரண்டர் இந்தியாவுக்கு மிகப்பெரிய துரோகம்
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தம் அல்ல, நாட்டின் சுயமரியாதை மற்றும் நலன்களை சரணடைதல் ஆகும். இது இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ இந்தியா விரைவில் அமெரிக்கப் பொருட்களுக்கான குப்பைத் தொட்டியாக மாறும்.

இது இங்குள்ள விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நலன்களைப் பாதிக்கும். இந்த ஒப்பந்தம் கடந்த 75 ஆண்டு இந்திய வளர்ச்சிக்கு செய்த துரோகமாகும். இது நமது நலனுக்கான ஒப்பந்தம் அல்ல. இது வேறு யாருமல்ல நரேந்திரனால் செய்யப்பட்ட முழுமையான சரணடைதல் ஆகும். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா, இந்தியாவை ஒரு திருடன் என்று முத்திரை குத்துகிறது’ என்றார்.

* விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசு விளக்கம்
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் கூறுகையில்,’ இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.27 லட்சம் கோடி சந்தையை இந்த ஒப்பந்தம் திறந்து விட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை பெறுவார்கள்.

அதே நேரத்தில், சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால், புகையிலை, சில காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் கிராமப்புற வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது’ என்றார்.

* ரஷ்யாவில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் வாங்கினால் உடனே வரி
ரஷ்யாவில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்காவிடம் இந்தியா உறுதியளித்துள்ளது . இதனால் நேற்று முதல் ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீதான 25 சதவீத வரிகளை அமெரிக்கா ஒரு தனி நிர்வாக உத்தரவின் மூலம் நீக்கியுள்ளது. இந்தியா மீண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்குகிறதா என்பதை அமெரிக்க அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

இந்தியா மீண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கண்டறிந்தால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி மீண்டும் விதிக்க வேண்டுமா அல்லது எந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதை உறுதி செய்ய இருநாடுகள் இணைந்து கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* இந்தியா சொல்வது என்ன?
* இந்திய பொருட்கள் மீதான வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்படும்.
* இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக சிறுகுறு நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ரூ.27 லட்சம் கோடி சந்தையை சந்தையைத் திறக்கும்.
* இருதரப்பு வர்த்தகத்தை பாதிக்கும் ரூ.17 லட்சம் கோடிக்கு அதிகமான வரி அல்லாத தடைகளை சரி செய்ய அமெரிக்கா சம்மதம்.
* ஜவுளி, ஆடைகள், தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப் பொருட்கள், சில இயந்திரங்களின் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து அதிகரிக்கும்.
* மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா ரத்து செய்யும்.

Related Stories: