பெங்களூரு: மக்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறினார். கர்நாடகாவில் ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான விவாதம் கடந்த சில மாதங்களாக எதிரொலித்து வருகிறது. செப்டம்பர் புரட்சி, அக்டோபர் புரட்சி, நவம்பர் புரட்சி என்று சொல்லப்பட்ட விவாதங்கள் முடிந்து புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதமான நிலையில், ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பாக எந்த புரட்சியும் நடக்கவில்லை.
முழு பதவி காலத்தை நானே நிறைவு செய்வேன் என்று முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக அறிவித்திருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொடர்பான ஆலோசனையை தொடங்கியுள்ளார். இது குறித்து மங்களூருவில் செய்தியாளர்களிடம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘மக்கள், கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் மேலிடம் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் முதல்வராக வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சி தலைமையும், காலமும் தான் தீர்மானிக்கும். எந்த கால கட்டத்திலும் கட்சி தலைமைக்கு விரோதமான எந்த முயற்சியும் நான் மேற்கொள்ள மாட்டேன். அரசியலில் என்னை வளர்த்தவர்கள் சொல்லி கொடுத்த வழியில் நான் நேர்மையாக நடப்பேன்’ என்றார்.
