புதுடெல்லி: இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில், “என் பெயர் மோடி, என் பணி சரணடைந்து கிடப்பதே” என காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தாலும், அதுபற்றி ஒன்றிய அரசு எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதை நிறுத்திய இந்தியா மீது விதித்த 25 சதவீத அபராத வரியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையையும் வௌ்ளை மாளிகை நேற்று வௌியிட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வௌியானதன் மூலம் ஒன்று தௌிவாகி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறதா, இல்லையா என்பதை இப்போது அமெரிக்கா கண்காணிக்கும். இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து தனியாக எண்ணெய் இறக்குமதி செய்யாது. இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா அறிந்தால், உடனே 25 சதவீத அபராத வரியை விதித்து விடும். இதனை மோடி அரசும் ஏற்று கொண்டுள்ளது. என் பெயர் நரேந்திர மோடி. என் பணி சரணடைந்து கிடப்பதே” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
* அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பாதிப்புகள் என்ன?
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில் பட்டியல் வௌியிட்டுள்ளார்.
* அதில், “இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாவோ கச்சா எண்ணெய் வாங்கினால் அமெரிக்கா மீண்டும் 25% அபராத வரியை விதிக்கும்.
* இந்திய விவசாயிகளின் நலனை பலி கொடுத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் விதமாக இந்தியா இறக்குமதி வரிகளை குறைக்கும்.
* அமெரிக்காவில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் செய்யும் இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.
* அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விவகாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கும்.
* இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.
* அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நெருக்கம் காட்ட பிரதமர் மோடி செய்த முயற்சிகள் பெரிதும் பலனளிக்கவில்லை. மோடியின் அமெரிக்க பயணத்தை விட, டிரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்று விட்டது நண்பன்(ரஷ்யா) இனி நண்பன் இல்லை” என தெரிவித்துள்ளார்.
