*போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை
சிதம்பரம் : சிதம்பரம் அருகேயுள்ள அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகினர். இதில் பெரும்பாலானோர் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரவு நேரங்களில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, மது போதை ஆசாமிகள் செயல்படுவதாக விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மர்ம நபரகள் இரவு நேரத்தில் விடுதி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள், காலி கப்புகள் உள்ளிட்டவகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.மேலும் இந்த பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் இரவு 2 மணிவரை சத்தமாக ஆபாசமாக பேசி கொண்டு ஆடி பாடி மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்கள் தூக்கமின்றி படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது வாங்கி இப்பகுதியில் அமர்ந்து அருந்தி வருவதாக தெரிகிறது. எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி பல்கலைக்கழகம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
