அரசு அலுவலர்களின் அலட்சிய போக்கால் விழிப்புணர்வு ஏற்படுத்தாத வாக்குப்பதிவு எந்திர வாகனம்

*கலெக்டர் கண்காணிக்க வலியுறுத்தல்

அரவக்குறிச்சி : மின்னணு வாக்குபதிவு எந்திரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெயரளவில் நடப்பதாக குற்றம்சாட்டிய பள்ளப்பட்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் இதனை உரிய வகையில் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதனையடுத்து, கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இவிஎம் மெஷின், வாக்கு பதிவை உறுதி செய்து பிரசுரிக்கப்பட்ட சீட்டு வெளியில் வரும் விவிபேட் மெஷின் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பானதும், வெளிப்படையானதும் உடைய கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்கும் வகையிலும், வாக்குப்பதிவு செய்யும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நடமாடும் வாகனங்கள் மூலம், வாக்கு பதிவு மெஷின் மற்றும் விவிபேட் மெஷின் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு பதிவு முறை குறித்தும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தங்கவேல் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் இந்த விழிப்புணர்வு வாகனம் கொண்டு செல்லப்பட்டு, ஆங்காங்கே வாக்கு பதிவு குறித்தும், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ேநற்று விழிப்புணர்வு வாகனம் வந்தது.

வந்து நின்ற 5 நிமிடங்களில் வாகனம் புறப்பட்டு சென்று விட்டது.பொதுமக்களுக்கு முழுமையான விளக்கம் கூட அளிக்கப்படவில்லை. மாதிரி வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு செய்வது குறித்து பயிற்சி பெறலாம் என்று காத்திருந்த பொதுமக்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மாதிரி மின்னணு வாக்குபதிவு மெஷின்களுடன் வந்த அதிகாரிகள், கடமைக்காக வந்ததுபோல், அரை மணி நேரம் கூட வாகனத்தை நிறுத்தி விளக்கம் அளிக்காமல், நிற்காமல், வெறும் ஐந்து நிமிடங்களில் புறப்பட்டு சென்று விட்டனர்.நடமாடும் வாக்கு பதிவு விழிப்புணர்வு வாகனத்தை பார்த்துவிட்டு வாக்குபதிவு செய்து பார்க்கலாம் என்று அருகில் வருவதற்குள் வாகனம் புறப்பட்டு சென்று விட்டது.

முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்களிக்கும் முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய அரசு அலுவலர்கள் இ்ப்படி அலட்சியமாக செயல்படலாமா? அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்படுகிறார்களா என்பது குறித்து வாகனம் செல்லும் இடங்களில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு நடத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: