வால்பாறையில் கடும் வெயில் தாக்கம்; காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது.
இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி, தற்போது வால்பாறை பகுதியில் ஈரப்பதம் பொதுவாக 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக ஈரப்பதம் குறைவாக காணப்படும் காலமாக இருப்பதால், நிலம் விரைவாக உலரும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் கடும் வெயிலும் வறட்சியான காலநிலையும் காரணமாக தோட்டங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதனைத்தொடர்ந்து காப்பி தோட்டங்களில் செடிகள் வாடாமல் பாதுகாக்க நீர் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கோடை மழை விரைவில் பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் வெயில் நீடித்து வருவதால் காபி தோட்டங்களில் பறிக்கப்பட்ட காபி பழங்களை உலர்த்தும் பணிகள் வேகமடைந்துள்ளது.

தோட்டங்களில் சேகரிக்கப்பட்ட காபி பழங்கள் பரப்பி காய வைக்கப்பட்டு, தரமான காபி கொட்டைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் முழு நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியான வெயில் காரணமாக உலர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெறுவதால், தோட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காலை முதல் மாலை வரை காபி பழங்களை திருப்பி காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Related Stories: