திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தும் அரசு பள்ளி அருகிலேயே குப்பை மற்றும் கழிவுகளை வீசி செல்லும் அவலநிலை நீடிக்கிறது. மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ராயபுரம் பகுதியில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
மாநகரப்பகுதி முழுவதும் சுகாதாரமானதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநகரில் பல்வேறு பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு மீண்டும் குப்பை கொட்டாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அந்த பலகையின் அருகிலேயே வீட்டுக்கழிவுகள், வணிக நிறுவன கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து குப்பைகளை கொட்டி செல்வதால், காலை நேரத்தில் பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் துர்நாற்றத்துடன் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இக்கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் அங்கு மொய்க்கும் ஈக்களால் மாணவிகளுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாநகரின் சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்பட்சத்தில் பொதுமக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முழு சுகாதாரத்தை பெற முடியும். அவ்வாறு ஒத்துழைப்பு இல்லாமல் சுகாதார விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
