இனி வரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 150 பேருக்கு அரசு வேலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருச்சி:விளையாட்டு துறையில் இனி வரும் காலங்களில் 150 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி கூறினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் நகர் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது தெரிவித்ததாவது: திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ​சைக்கிளிங் வீரர் பிரதீப் சங்கரா மற்றும் பாரா தடகள வீரர் மணிகண்டன் ஆகியோர் பல தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ​குறிப்பாக, மணிகண்டன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர்கள் என்பது கூடுதல் பெருமை. ​

இவர்களைப் போலவே உங்களில் இருந்தும் பல பிரதீப் சங்கராக்களும், மணிகண்டன்களும் உருவாக வேண்டும் என்பதே அரசின் இலக்கு. விளையாட்டில் கவனம் செலுத்தும் மாணவர்கள் வாழ்க்கை குறித்து பெற்றோர் பயந்தனர். அதற்கு தற்போது அவசியமில்லை. விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அரசு வேலை உண்டு என நம் தமிழ்நாடு அரசு பெற்றோருக்கு தைரியம் கூறியுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 380 கோடி ரூபாய். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 141 மினி ஸ்டேடியங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் 150 வீரர்களுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். ​தேசிய சர்வதேச அளவிலான போட்டிகளில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாம் இப்போது தேசிய சர்வதேச பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளோம். அது திராவிட மாடல் அரசு முன்னெடுப்பு செய்தது என்பதில் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: