குளச்சலில் சரக்கு பெட்டக துறைமுகம் மீனவர்கள் எதிர்த்த திட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்த்த சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதில் குமரி மாவட்டம் சார்ந்த சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாகப்பட்டினம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி நான்குவழி சாலைத் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சரக்குப் பெட்டக இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் சார்ந்த கடற்கரை பகுதிகள் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின்கீழ் பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடல்சார் விளையாட்டு மையம் ஏற்படுத்தி படகு சவாரி, அலைச்சறுக்கு, ஸ்கூபா டைவில், வாட்டர் போலோ, ப்ரீ டைவிங் போன்ற விளையாட்டுக்கள் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனங்களின் பங்களிப்புடன் வேல்டு கிளாஸ் வாட்டர் தீம் பார்க் அமைக்கப்படும்’ என்ற மூன்று அறிவிப்புகளை வெயிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இனையம் பகுதியில் முன்மொழியப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்திற்கு எதிராக, மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றிருந்தது. குறிப்பாக 2016ம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வீதிக்கு வந்தனர். சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கடலில் அணிவகுத்திருந்தனர். கடற்கரைப் பகுதிகளில் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டு மக்கள் திரண்டனர்.

தொடர் உண்ணாவிரதம் (ஜூலை 2016) இனையம், முள்ளூர்துறையில் தொடங்கி ஹெலன் நகர் வரை பல்வேறு இடங்களில் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. நவம்பர் 2016 மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டியிட்டுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக, 2017 ஆகஸ்ட் 20 அன்று நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை சுமார் 48 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

தற்போது வரை, மக்களின் தொடர் எதிர்ப்பால் இத்திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து முடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டத்தை ‘குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சரக்குப் பெட்டக இணைய வசதி ஏற்படுத்த ஒன்றிய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தடாலடியாக அறிவித்துள்ளது குமரி மாவட்ட மீனவர் கிராமங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி குமரி மாவட்டம் வருகை தந்து நாகர்கோவிலில் நடந்த விழாவில் ரூ.150 கோடி மதிப்பில்குளச்சல் மீன் துறைமுக விரிவாக்கம், ரூ.150 கோடி மதிப்பில் வாணியக்குடியில் புதிய மீன் துறைமுகம் அமைத்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். காணொளி காட்சி வாயிலாக குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகள் மற்றும் வாணியக்குடி புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இரு திட்டங்களும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது, இது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் புதிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: