எடப்பாடி vs பங்காளி: திமுகவில் நேர்காணலுக்கு சென்று உற்சாகம்

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக இருப்பது இடைப்பாடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பது முக்கிய காரணம். எதிர்வரப்போகும் தேர்தலில், இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப்போவது யார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவர் காசி, கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் டாடா, பரமசிவம், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் தற்போது விருப்பமனு அளித்து நேர்காணலுக்கு சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் முறை உறவினரான விஸ்வநாதன் (75) என்பவரும், இந்த தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்காணலுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இது இடைப்பாடி தொகுதி தேர்தல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‘‘எனது அம்மாவும், எடப்பாடி பழனிசாமியின் அம்மாவும் அக்கா, தங்கை. இந்த வகையில் எனது சித்தி மகன் தான் எடப்பாடி பழனிசாமி. பங்காளிகளான நாங்கள் இருவரும் சிலுவம்பாளையத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தான் வசித்து வருகிறோம். அவர் எனது தம்பியாக இருந்தாலும் திமுக தலைவரின் திட்டங்கள், செயல்பாடுகள், அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டேன். இதனால் திமுகவில் இணைந்து 7 வருடங்களாக கட்சி பணியாற்றி வருகிறேன்.

எடப்பாடி பழனிசாமி வெற்றி ெபற்ற தொகுதியாக இருந்தாலும், முதல்வரின் திட்டப்பணிகளே நிறைந்து நிற்கிறது. மக்கள் அனைவரும் இதைப்பற்றியே பேசி வருகிறார்கள். மிகவும் முக்கியமாக இடைப்பாடி தொகுதியில் எம்ஜிஆரை போல, பெண்களை கவர்ந்த தலைவராக முதல்வர் விளங்குகிறார். யார் போட்டியிட்டாலும் அவர்கள் திமுகவிற்கு வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

பாமக கூட்டணி ஓட்டுகளால் கடந்த முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இந்த முறை ராமதாஸ், தனி அணியாக போட்டியிடுவதால் அந்த வாக்குகள் குறையும். எனது பங்காளி வெற்றி பெறுவது சிரமம். எனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், கட்சி தலைமை சொல்லும்படி தேர்தல் பணியாற்றுவேன். மற்றபடி தொகுதியில் யாருக்கு தலைமை வாய்ப்பு வழங்கினாலும், அவர்களின் ெவற்றிக்காக பாடுபடுவேன்,’’ என்றார்.

Related Stories: