சென்னை: இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் விசிகவுக்கான தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவு தான் என்று திருமாவளவன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிகவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 7, 8 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுக்கோப்போடு இயங்கும் கூட்டணி.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மதவெறி, சாதிவெறி, வலுதுசாரி சக்திகள் வலுப்பெறுவதை தடுக்க வேண்டும். நாட்டையும், மக்களையும் மதவாத எதிர்ப்பு அரசியலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என உறுதியேற்று செயல்படும் கூட்டணி. இந்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்து கோணங்களிலும் நல்லது, கெட்டதை சீர்தூக்கி பார்த்து, விசிகவின் நலன் எவ்வளவு முக்கியமோ, அந்தவகையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியம் என கருதி இந்த முடிவுக்கு விசிக உடன்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து திமுகவோடு நாங்கள் பயணிப்பதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பயணிக்க முதன்மையான காரணம், இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான். என்னுடைய பார்வையில் விசிகவுக்கு கிடைத்திருக்கும் 8 தொகுதிகள், கம்யூனிஸ்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 10 தொகுதிகளையும் சேர்த்து 18 தொகுதிகள், இதுதவிர முஸ்லிம் அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் இடதுசாரி அரசியலை பாதுகாக்க போராடக்கூடிய இயக்கங்களுக்கு தி.மு.க. வழங்கியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ராஜ்யசபா சீட் குறித்தும் பேசினோம். அதுபற்றி இப்போது முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. கேட்டு இருக்கிறோம். பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். விசிக சிதைக்கப்படும் அளவுக்கு பலவீனமான கட்சி இல்லை. நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் கட்சி. அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காது.
எங்கள் சுயநலம், கட்சி நலன், தனிநபர் நலன்களை விட சமூக, மாநில, தேச நலன்களை முன்னிறுத்தி பார்க்கிறோம். மற்றவர்களுக்கு எங்கள் நிலைப்பாடு பலவீனமாக இருக்கலாம். எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. மற்றவர்களை ஒப்பீடு செய்தும் கேட்கவில்லை. திமுக இருக்கும் இடத்தில் விசிக இருந்து எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்கிறது.
